தொழில்நுட்பம்
நோக்கியா

தமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா ஆலை மூடல்

Published On 2020-05-27 08:39 GMT   |   Update On 2020-05-27 08:39 GMT
ஆலையில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது.



தமிழ்நாட்டில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை ஊழியர்களில் சிலருக்கு கொரோனா வைரல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆலை பணிகள் நிறுத்தப்பட்டது.

நோக்கியா சார்பில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்ற விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து வெளியான தகவல்களில் சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் மொத்தம் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட ஆலையில் பணிகளின் போது சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டதாகவும், ஆலையில் உள்ள உணவகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக நோக்கியா ஆலை பணிகள் படிப்படியாக துவங்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் விதிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உற்பத்தி ஆலை பணிகள் துவங்கி நடைபெற்று வந்ததாக நோக்கியா தெரிவித்துள்ளது.

முன்னதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவும், தனது ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆலையை மூடப்பட்டது.
Tags:    

Similar News