ஆன்மிகம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் கோமளவல்லி தாயார் ஊஞ்சலில் எழுந்தருளிய காட்சி.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

Published On 2020-12-16 03:33 GMT   |   Update On 2020-12-16 03:33 GMT
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. உற்சவத்தை ஒட்டி தினமும் வேத பாராயணம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவ தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் வரிசையில் 3-வது மிகப்பெரிய தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் 7 ஆழ்வார்களால் பாசுரங்கள் பாடப்பட்டு மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்புடையவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரை தொடர்ந்து உற்சவங்கள் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.

முன்னதாக கடந்த 6-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வந்தது. இதில் நேற்று முன்தினம் கோமளவல்லி தாயார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று பகல் பத்து உற்சவங்கள் தொடங்கின. வருகிற 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

உற்சவத்தை ஒட்டி தினமும் வேத பாராயணம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News