செய்திகள்
விலை குறைவால் குவிந்து கிடக்கும் பூசணிக்காய்கள்

கால்நடைகளுக்கு தீவனமாக மாறிய பூசணிக்காய்கள்- பரமக்குடி விவசாயிகள் வேதனை

Published On 2021-02-20 09:44 GMT   |   Update On 2021-02-20 09:44 GMT
இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக 3 மாத பயிரான பூசணிக்காய் செடியிலேயே அழுகிப் போய் விளைச்சல் குறைந்துள்ளது.
பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களான சுப்புராயபுரம், வெங்கடன்குறிச்சி, கலையூர், முத்துசெல்லாபுரம் ஆகிய கிராமங்களில் மானாவாரி பயிராக பூசணிக்காய் பயிரிடுவது வழக்கம்.

இந்த ஆண்டு 300 ஏக்கருக்கு மேல் பூசணிக்காய் பயிரிடப்பட்டிருந்தது. இங்கு விளைவிக்கப்படும் பூசணிக் காய்கள் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கோவை, ஒட்டன்சத்திரம் மற்றும் கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த பூசணிக்காய் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் லாபம் பெறுவர்.

ஆனால் இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக 3 மாத பயிரான பூசணிக்காய் செடியிலேயே அழுகிப் போய் விளைச்சல் குறைந்துள்ளது. வியாபாரிகளும் நஷ்ட விலைக்கே பூசணிக்காயை எடுத்துச் செல்கின்றனர். இதனால் பூசணிக்காயை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

அவை செடியிலேயே அழுகி கிடக்கின்றன. விவசாயிகள் வியாபாரிகள் வாங்கிச் சென்ற பூசணிக் காய்களும் ஏற்றுமதி ஆகாமல் வீட்டிலேயே குவிந்து கிடக்கின்றன.

இதனால் பாதிக்குமேல் அழுகிப்போய் கோழி, மாடு, ஆடுகளுக்கு தீவனமாகவும் நிலங்களுக்கு உரமாகவும் போடப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு டன் பூசணிக்காய் ரூ.10 ஆயிரம் வரை விலை போனது, ஆனால் இந்த ஆண்டு டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வரை தான் விலை போகிறது. இதனால் கடன் வாங்கி செலவு செய்த பணம் அனைத்தும் வீணாகி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News