செய்திகள்
செந்நிறமாக மாறிய தண்ணீர்

ஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்

Published On 2021-09-15 08:55 GMT   |   Update On 2021-09-15 09:52 GMT
ஒரே நாளில் ஏராளமான டால்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள் கண்டித்துள்ளன.
பாரோ தீவுகள்:

நார்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவுகள். இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவுகளில் வேட்டையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை குறிப்பாக திமிங்கிலம் மற்றும் டால்பின்களை வேட்டையாடுகின்றனர். கிரைண்ட் அழைக்கப்படும் இந்த வேட்டையில் திமிங்கலங்களும் டால்பின்களும் கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடல்நீர் செந்நிறமாக காட்சியளிக்கும். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த கொடூரமான வேட்டை தொடர்கிறது.

அவ்வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான வேட்டையை நடத்தி முடித்திருக்கின்றனர் பாரோ தீவின் வேட்டைக்காரர்கள். இந்த வேட்டையின்போது ஒரே நாளில் 1400 டால்பின்கள் கொல்லப்பட்டுள்ளன. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

ஐஸ்ட்ராயில் உள்ள ஸ்கலாபோத்னர் கடற்கரையில் ஆழமற்ற பகுதியில் டால்பின்களை கொண்டு வந்து கத்திகளால் வெட்டி கொன்றுள்ளனர். இதனால் அந்த பகுதி தண்ணீர் முழுவதும் ரத்தம் கலந்து செந்நிறமாக காட்சியளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.



இந்த அளவிற்கு ஏராளமான டால்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள்  கண்டித்துள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். இது மிகவும் கொடுமையானது என்றும் இந்த வேட்டை தேவையற்றது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

திமிங்கலங்களை வேட்டையாடுவது என்பது, இயற்கையிலிருந்து உணவு சேகரிப்பதற்கான நிலையான வழி மற்றும் தங்களின் கலாச்சார அடையாளத்தின் ஒரு முக்கிய பகுதி என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 


Tags:    

Similar News