செய்திகள்
கோப்புபடம்

பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை - விரைந்து சுமூக தீர்வு காண திட்டம்

Published On 2021-09-13 05:46 GMT   |   Update On 2021-09-13 05:46 GMT
உற்பத்தியாளர் சங்கத்தினரும் தொழிற்சங்கத்தினரும், தங்களுக்குள் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

பனியன் உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் ‘சைமா’, ஏற்றுமதியாளர் சங்கம், ‘டீமா’, ‘நிட்மா’, ‘சிம்கா’, ‘டெக்மா’ சங்கங்களும், தொழிற்சங்கங்கள் தரப்பில் சி.ஐ.டி.யு.,  ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., எம்.எல்.எப்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., அண்ணா தொழிற்சங்கங்களும் ஈடுபட்டுள்ளன.

கடந்த 4-ந்தேதி முதல் இதுவரை இரு தரப்பினரும் 6 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தொழிற்சங்கங்கள் 90 சதவீத சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்துள்ளன. 

உற்பத்தியாளர் சங்கங்கள் 5-வது  சுற்றில் 28 சதவீதம் வரை உயர்வு வழங்க சம்மதித்தன. ஆனால் தொழிற்சங்கங்கள் கூடுதல் சதவிகித சம்பள உயர்வு எதிர்பார்க்கின்றன. உற்பத்தியாளர் சங்கங்கள் 28 சதவீதத்துக்கு மேல் செல்ல மறுக்கின்றன.

6-வது சுற்று சம்பள பேச்சுவார்த்தையிலும் இழுபறி நிலை நீடித்தது. இதனால் அடுத்து வரும் பேச்சுவார்த்தையில் இணக்கமான முடிவு எட்டப்பட்டு புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன.

வருகிற 17-ந்தேதி 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதற்குமுன் உற்பத்தியாளர் சங்கத்தினரும் தொழிற்சங்கத்தினரும், தங்களுக்குள் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். 

ஆலோசனையில் பெறப்படும் கருத்துக்களை மையமாக வைத்து இருதரப்பு ஒப்பந்த பேச்சில் விரைந்து சுமூக தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்
Tags:    

Similar News