செய்திகள்
அப்துல் கலாம் மணிமண்டபத்தை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வாசலில் நின்று வேடிக்கை பார்த்த காட்ச

ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள் : கலாம் மணிமண்டபம் 1-ந்தேதி திறக்கப்படுமா?

Published On 2020-09-27 22:38 GMT   |   Update On 2020-09-27 22:38 GMT
ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபம் 6 மாதங்களுக்கும் மேலாக மூடியே கிடப்பதால் சுற்றுலா பயணிகள் மணிமண்டபத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் மற்றும் மணிமண்டபம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் மூடப்பட்டது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு மேலாகவே அப்துல்கலாம் மணிமண்டபம் மூடியே கிடக்கிறது.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுற்றுலா தலமான ராமேசுவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தாலும் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணி மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள், மாணவ-மாணவிகள் செல்வதற்கான தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

ராமேசுவரத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அப்துல் கலாம் மணிமண்டபம் மூடி இருப்பதால் வாசலில் நின்று செல்பி எடுத்துக் கொண்டு மணிமண்டபத்தை பார்வையிட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வழக்கம் போல் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவும், மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ள கலாமின் பல்வேறு சாதனைகள் அடங்கிய புகைப்படங்களை பார்வையிடவும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News