ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் முடிந்தவுடன் சிறப்பு தீபாராதனை நடந்ததை படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-10-16 05:10 GMT   |   Update On 2019-10-16 05:10 GMT
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5-30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா சுற்றி வந்தார்.

இதைத்தொடர்ந்து அம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் காலை 7-30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, வீதி உலா நடக்கிறது. 4-ம் திருவிழாவான வருகிற 18-ந்தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் காந்திமதி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது.

7-ம் திருவிழாவான 21-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தந்த பல்லக்கு வாகனத்தில் தவழ்ந்த திருக்கோலத்திலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 22-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் பச்சை சாத்திவீதி உலாவும், இரவு 8 மணிக்கு கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள், செப்பு தேரில் பவனியும், இரவு 8 மணிக்கு தந்தப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 24-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாளுக்கு தங்க பல்லக்கில் தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு அம்மாள் தவக்கோலத்துடன் தங்கசப்பரத்தில் கம்பை நதிக்கு எழுந்தருளுகிறார்.

25-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 8-30 மணிக்கு சுவாமி ரி‌‌ஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்க கோவிலில் இருந்து எழுந்தருளலும், 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் ரி‌‌ஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் வைபவமும் நடக்கிறது.

26-ந்தேதி அதிகாலை 4-30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது. 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. 29-ந்தேதி இரவு சுவாமி, அம்பாள் ரி‌‌ஷப வாகனத்தில் மனுவீடு பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது.
Tags:    

Similar News