செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழிலை கைவிட்ட மீனவர்கள்

Published On 2018-07-09 13:27 GMT   |   Update On 2018-07-09 13:27 GMT
குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைப்பதால் வேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழிலை மீனவர்கள் கைவிட்டனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட சில மீனவர் கிராமங்களில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான பைபர் படகுகளும் கடலில் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கோடியக்கரையில் இருந்து நேற்று ஒருசில படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் வலையில் ஒரு கிலோ இரண்டு கிலோ என குறைந்த அளவிலேயே வாவல் மீன்கள் மட்டும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தனர். ஒருநாள் மீன்பிடிக்க சென்று வர குறைந்தபட்சம் ரூ.3500 செலவாகும் நிலையில் பிடிபடும் மீன்கள் ரூ.500க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.3000 நஷ்டத்தை சந்திக்கும் பைபர் படகு மீனவர்கள் படகுகிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தாங்களும் வீடுகளில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.

தற்போது ஆறுகாட்டுத்துறையில் சென்றுவந்த ஒருசில படகுகளில் சீலா, இறால், நண்டு குறைந்த அளவில் கிடைத்தன. சீலா கிலோ 600க்கும் இறால் 150க்கும் புள்ளி நண்டு 150க்கும் நீலக்கால் நண்டு 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது ஆறுகாட்டுத் துறையில் கானாங்கெளுத்தி, மத்தி, வாவல், சுறா, காலா போன்ற மீன்கள் அதிகளவில் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த மீன்கள் அறவே கிடைக்காததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இது குறித்து ஆறுகாட்டுத்துறை மீனவர் ஒருவர் கூறும்போது,

விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி. இரட்டைமடி பயன்படுத்துவதால் மீன்வளம் முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் சிறிது தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதேநிலை நீடித்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகிவிடும். எனவே அரசு இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை முற்றிலும் தடை செய்து சிறு மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News