செய்திகள்
சாதிக்பாட்சா - பாதாள சாக்கடையில் விழுந்த தொழிலாளியை தீயணைப்பு படை வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.

கும்பகோணத்தில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி உயிரிழப்பு

Published On 2019-11-15 04:01 GMT   |   Update On 2019-11-15 04:01 GMT
கும்பகோணத்தில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா(வயது 55). இவர் நகராட்சி தனியார் ஒப்பந்ததாரரிடம் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கும்பகோணம் ரெயில் நிலையம் சாலையில் கடந்த 2 நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது. அதன் பேரில் பராமரிப்பு பணிக்காக மேற்பார்வையாளர் ராஜா தலைமையில் 4 பேர் சென்றனர்.

இதில் துப்புரவு தொழிலாளர்கள் விபுத்ரன், வீரமணி, பாக்யராஜ், சாதிக்பாட்சா ஆகிய 4 பேரும் நேற்று மாலை 4 மணி அளவில் ரெயில் நிலையம் எதிரே உள்ள பஸ் நிறுத்தம் அருகே பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை தொடங்கினர்.

அப்போது பாதாள சாக்கடையில் ஆள் இறங்கும் குழியின் மூடியை 4 பேரும் சேர்ந்து அகற்றினர். பின்னர் மற்றவர்கள் அருகில் இருந்த டீ கடைக்கு சென்றுள்ளனர். சாதிக்பாட்சா மட்டும் உடைகளை கழற்றிவிட்டு பிளாஸ்டிக் பைப்பால் பாதாள சாக்கடையின் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு வெளியேறி அவரை தாக்கியது. இதில் மயக்கம் அடைந்த அவர் பாதாள சாக்கடைக்குள் விழுந்தார். இந்த நிலையில் டீ கடைக்கு சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, சாதிக்பாட்சா விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ராஜா, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்கள் இரவு 8.30 மணிக்கு சாதிக்பாட்சாவின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சாதிக்பாட்சா மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக கும்பகோணம் ரெயில் நிலைய சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ., நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர். இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News