ஆன்மிகம்
பழமுதிர்சோலை முருகன்

பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள பழமுதிர்சோலை

Published On 2021-01-05 08:55 GMT   |   Update On 2021-01-05 08:55 GMT
பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார்.
முருக பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைந்த தலம் இது. பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். அழகர்கோவிலுக்கு மேலே சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது திருக்கோவில் ஆகும். தொடக்க காலத்தில் முருகனின் அம்சமாக கருதப்படும் வேலுக்குதான் இங்கு வழிபாடு நடைபெற்று வந்தது. தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கும் முறை உள்ளது.

தமிழ் கடவுளான முருகன் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி அவ்வையிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இது. ‘பழம் உதிர் சோலை’ என்பதே ‘பழமுதிர்சோலை’ என்றானது.

இதன் அருகே உள்ள ‘நூபுரகங்கை’ என்னும் பிரசித்திபெற்ற தீர்த்தம் உள்ளது. இதன் உற்பத்தி ஸ்தானத்தை இன்னும் கண்டறிய முடியாததே இதன் சிறப்பு. இங்குள்ள தீர்த்தங்களுக்கு காவல் தெய்வமாக ராக்காயி அம்மன் உள்ளார். இவருக்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பழமுதிர்சோலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது என்பதால் இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.

மதுரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, அழகர்மலை.
Tags:    

Similar News