செய்திகள்
பூங்காவிற்கு செல்லும் நடைபாதையில் பெண்கள் செல்வதையும், சாலையோரத்தில் சிலர் படுத்திருந்ததையும் படத்தில் காணலாம்

அரியலூர் செட்டி ஏரி பூங்கா பகுதியில் போதையில் விழுந்து கிடக்கும் மதுப்பிரியர்கள்

Published On 2021-07-07 13:36 GMT   |   Update On 2021-07-07 13:36 GMT
அரியலூர் செட்டி ஏரி பூங்கா பகுதியில் போதையில் விழுந்து கிடக்கும் மதுப்பிரியர்களால், அந்த வழியாக செல்லும் பெண்கள் சிரமமடைகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் நகரின் மையப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான செட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள பகுதியில் பஸ் நிலையம், வாரச்சந்தை, போலீஸ் குடியிருப்பு, நகராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. ஏரிக்கரையில் நடைப்பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் காலை, மாலை இருவேளையும் வந்து செல்கின்றனர்.

அதன் நுழைவு வாயிலின் எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. காலை 10 மணிக்கு கடை திறந்தவுடன் மது குடிக்க வருபவர்கள், மதுபாட்டில்களை வாங்குகின்றனர். ஆனால் மது குடிப்பதற்கு பார் வசதி இல்லாததால், நகராட்சி அலுவலகத்தில் இருந்து செட்டி ஏரி பூங்கா வரை உள்ள இடங்களில் மது அருந்துகின்றனர். போதை அதிகமானதும் செட்டி ஏரி பூங்காவிலும், வாரச்சந்தை நடைபெறும் கட்டிடப் பகுதியிலும் அரைகுறை ஆடையுடன் விழுந்து கிடக்கின்றனர்.

அந்த வழியாகத்தான் மாலை நேரங்களில் பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவிற்கு செல்கின்றனர். அரைகுறை ஆடையுடன் போதையில் கிடப்பவர்களால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே நுழைவு வாயிலிலேயே கட்டணம் வசூலிக்கும் அறையை அமைத்து, வேறு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு தடுக்க வேண்டும். மேலும் வாரச்சந்தை கட்டிடம் கடந்த இரண்டு மாதங்களாக மூடிக்கிடக்கிறது.

அங்கு பகலில் மது அருந்துவது, சூதாடுவது போன்ற செயல்கள் நடந்து வருகின்றன. இதனை போலீசாரும், நகராட்சி ஊழியர்களும் தினசரி பார்த்து செல்கின்றனர். ஆனால் யாரும் அவர்களை கண்டிப்பதில்லை. மது அருந்தி செல்பவர்கள் காலி பாட்டில்களை உடைத்து போட்டு விடுவதால் நடைபயிற்சி செல்பவர்களின் கால்களில் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் என்பதே அங்கு வரும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

Tags:    

Similar News