உள்ளூர் செய்திகள்
நகை

அட்சய திருதியை நாளில் நகை வாங்க ஆர்வம்- நாடு முழுவதும் 150 டன் தங்கம் விற்பனை

Published On 2022-05-04 10:42 GMT   |   Update On 2022-05-04 10:42 GMT
தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய, பெரிய நகை கடைகள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன.
கோவை:

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் 3வது திருதியையான வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை தினத்தில் குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை.

இதனால் அட்சய திருதியை தினத்தன்று மக்கள் தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டவில்லை.

தற்போது கட்டுப்பாடுகள் விலகி மக்கள் இயல்புநிலைக்கு திரும்பியதால் இந்த ஆண்டு அட்சய திருதியையான நேற்று தங்கம் விற்பனை அதிகளவில் இருந்தது. பல்வேறு நகைக்கடைகள் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவோருக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள், பரிசுப் பொருட்கள் அளிப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டன. மேலும் நகை வாங்க முன்பதிவு வசதியையும் அறிவித்து இருந்தன.

அதன்படி நேற்று நகை கடைகள் அனைத்தும் முழுமையாக திறந்து செயல்பட்டன. அதிகாலையிலேயே கடைகள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நகை விற்பனை தொடங்கியது. காலை முதலே மக்கள் நகைக்கடைகளில் குவியத் தொடங்கினர்.

முன்பதிவு செய்து தங்கம் வாங்குபவர்கள், பதிவு செய்யாமல் தங்கம் வாங்குபவர்கள் என்று 2 தரப்பினரும் நகை வாங்க குவிந்ததால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் போட்டி போட்டு நகைகளை தேர்வு செய்து வாங்கினர்.

தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய, பெரிய நகை கடைகள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை நாளில் முழுமையாக செயல்பட்ட இந்த நகை கடைகளில் வழக்கத்தை விட நகை விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல கடைகளில் நள்ளிரவு 12 மணி வரை விற்பனை நடந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தங்கத்தின் விலையை விட தற்போது தங்கம் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் மக்கள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நகை வாங்குவதில் மும்முரம் காட்டினர். சிலர் நகைக்கு பதிலாக தங்க நாணயங்களை வாங்கினர்.

இதன் காரணமாக கடந்த ஆண்டுகளை விட தங்க நகை விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 18 டன்னுக்கும் அதிகமான தங்கம் விற்பனை ஆகி உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இருக்கும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் சுமார் 150 டன் முதல் 200 டன் வரை தங்கம் விற்பனையாகி இருக்கலாம் என தோராயமாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் செல்லானியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டாக அட்சய திருதியைக்கு நகை விற்பனை பெரிய அளவில் இல்லை. கடந்த 2019ம் ஆண்டு அட்சய திருதியை அன்று நாடு முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையானது. 2020ம் ஆண்டு ஊரடங்கால் வெறும் ரூ.500 கோடிக்கு மட்டுமே விற்பனையானது.

இந்த ஆண்டு தங்கம் விற்பனை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனை ஆகி உள்ளது. அதன்படி நாடு முழுவதும் பார்த்தால் 150 டன் முதல் 200 டன் வரை தங்கம் விற்பனை நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஒரு டன் தங்கத்தின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து ரூ.4,796க்கு விற்பனை ஆனது. பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.38,368க்கு விற்பனை ஆனது. அட்சய தினத்தன்று தங்கம் விலை சற்று குறைந்திருந்ததும் விற்பனை அதிகரித்ததற்கான காரணமாக கூறப்படுகிறது.

இதேபோல வெள்ளிப்பொருட்களின் விற்பனையும் அதிகரித்து இருந்தது. நடுத்தரவாசிகள் நகைக்கடைகளில் தொடங்கப்படும் நகைச்சீட்டு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டினர்.
Tags:    

Similar News