செய்திகள்
அம்பிகா சோனி

சீக்கிய தலைவரை பஞ்சாப் முதல்வர் ஆக்குங்கள்... வந்த வாய்ப்பை ஏற்க மறுத்த அம்பிகா சோனி

Published On 2021-09-19 07:10 GMT   |   Update On 2021-09-19 07:10 GMT
பஞ்சாப் முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்து, முன்னாள் மாநில தலைவர் சுனில் ஜாக்கர், மந்திரி சுக்ஜீந்தர் சிங் ஆகியோர் உள்ளனர்.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை மேற்கொண்டது. 

இதற்காக கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுகிறார். இதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது.



முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்து, முன்னாள் மாநில தலைவர் சுனில்  ஜாக்கர்,  மந்திரி சுக்ஜீந்தர் சிங் ஆகியோர் உள்ளனர். இதில், சித்துவை முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பதவி விலகிய அமரீந்தர் சிங் திட்டவட்டமாக  கூறிவிட்டார். எனவே, அவரை தேர்வு செய்தால், அமரீந்தர் சிங் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்துவார்கள். 

இதற்கிடையே, கட்சியின் மூத்த தலைவரான அம்பிகா சோனியை முதல்வராக தேர்வு செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால், அந்த வாய்ப்பை அம்பிகா சோனி ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அம்பிகா சோனி, சீக்கியர் அல்லாதவரை முதல் மந்திரி ஆக்கினால், தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்றும், அதனால் தனது பெயரை முதல் மந்திரி பதவிக்கு முன்மொழிய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags:    

Similar News