உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தேசிய அளவிலான மதிப்பு கூட்டு பயிற்சியில் பங்கேற்ற உடுமலை மலைவாழ் பெண்களுக்கு பாராட்டு

Published On 2021-12-01 07:05 GMT   |   Update On 2021-12-01 07:05 GMT
டெல்லிக்கு தனியாக நாங்கள் சென்று வந்தது எங்கள் பகுதியில் இருக்கின்ற மலைவாழ் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடியதாக அமைந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
உடுமலை:

இந்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மதிப்புக்கூட்டு பயிற்சி பற்றிய தேசிய அளவிலான பயிற்சி டெல்லியில் நடைபெற்றது.

இந்த தேசிய அளவிலான பயிற்சியில் தமிழகத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அருகில் உள்ள கரட்டுப்பதி பகுதியை சேர்ந்த பிரியா, மகேஸ்வரி ஆகிய 2 பழங்குடியின பெண்கள் பங்கேற்றனர்.

இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமராவதி கோடந்தூர், தளிஞ்சி போன்ற உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதிகளில் இந்திய அரசின் கயிறு வாரியம் மூலமாக மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கருத்தாளர்களாக செயல்பட்டவர்கள்.

முதல் முறையாக தேசிய அளவிலான மதிப்பு கூட்டு பயிற்சியில் கலந்துகொண்ட அவர்கள் பயிற்சியில் புதுமையான முறையில் மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிப்பது பற்றியும் அவற்றை எவ்வாறு விற்பனை செய்யலாம் என்பது பற்றிய விளக்கம் அளித்ததாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் 2பேருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது பிரியா, மகேஸ்வரி கூறுகையில், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், ஆனைமலை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட அமராவதி, உடுமலை வனத்துறை அலுவலர்கள் மற்றும் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் மதிப்புக்கூட்டு பயிற்சிகளில் நாங்கள் கலந்து கொண்டதன் விளைவாக இந்த அரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. 

அதோடு மட்டுமல்லாமல் முதல் முறையாக டெல்லிக்கு தனியாக நாங்கள் சென்று வந்தது எங்கள் பகுதியில் இருக்கின்ற மலைவாழ் பெண்களுக்கு  தன்னம்பிக்கை தரக்கூடியதாக அமைந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மணி, செயலாளர் நாகராசன், கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் பயிற்சிக்கு சென்று வந்த மலைவாழ் பெண்களான பிரியா மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News