ஆன்மிகம்
நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஆவணி மூலத்திருவிழா:நாரைக்கு முக்தி கொடுத்த லீலை

Published On 2019-09-03 05:33 GMT   |   Update On 2019-09-03 05:33 GMT
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் சுவாமியும், அம்மனும் ஆவணி மூலவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். விழாவையொட்டி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் லீலை நேற்று முன்தினம் நடந்தது. 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை நடந்தது. அந்த லீலை புராணம் வருமாறு:-

மதுரைக்கு தெற்கே ஒரு தடாகத்தில் ஒரு நாரை இருந்தது. அந்த தடாகத்தில் நீர் வற்றியதால் மற்றொரு குளத்திற்கு சென்றது. அக்குளத்திலே முனிவர்கள் நீராடினர். அவர்கள் மேலே புரண்டு விளையாடிய மீன்களை உண்ணலாகாது என கருதி உண்ணாமலே இருந்தது. அந்த முனிவர்களின் உரையாடலால் மதுரையை பற்றி அறிந்த நாரை மதுரைக்கு வந்து பொற்றாமரை குளத்திலே நீராடி இறைவனை வணங்கி முக்தி பேறு பெற்றது.

மேலும் அந்த நாரை இறைவனிடம் பொற்றாமரை குளத்திலே நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது, அவ்வாறு இருந்தால் மற்ற பறவைகள் அதனை உண்ணக்கூடும். அதனால் பாவம் வந்து சேரும். எனவே நீர் வாழ் உயிரினங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று வரம் வாங்கியது. நாரைக்கு இறைவன் அருளிய வரத்தின்படி இன்று வரை இக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்பது கருதற்குரியது என புராண வரலாறு கூறுகிறது.

விழாவில் இரவு சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பூக்கடை தெரு, கீழ மாரட் வீதி, அம்மன் சன்னதி, ஆவணி மூல வீதி சுற்றி கீழபட்டமார் தெரு, கிழக்கு சித்திரை வீதி வழியே மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். 
Tags:    

Similar News