செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு

Published On 2021-09-07 19:23 GMT   |   Update On 2021-09-07 19:23 GMT
நீதிபதிகள், ‘அரசியல் ஞானம் அதிகம் உள்ளது என்று கூறி 18 வயது பூர்த்தி ஆகாத ஒருவரை பொது தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.
சென்னை:

மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் 'நீட்' தேர்வில் பங்கேற்பதற்கு 17 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீஹரிணி என்ற 16 வயது மாணவி 12-ம் வகுப்பு முடித்துள்ளார். இவர், நீட் தேர்வு எழுத தன்னை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவி புத்திசாலித்தனமாக உள்ளதால் அவரை நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேசிய தேர்வு முகமை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.ராஜகோபால், ‘நடப்பு கல்வி ஆண்டில் நீட் தேர்வு எழுதுவோர் 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி அன்று 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ கமிஷன் விதி உள்ளது.



இந்த விதியில் ஐகோர்ட்டு தலையிடக் கூடாது. மாணவி புத்திசாலித்தனமாக இருந்தாலும், அதற்காக விதிகளை மீறி தேர்வு எழுத அனுமதிக்க முடியாது' என்று வாதிட்டார்.

மாணவி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘17 வயது ஆகாவிட்டாலும், மாணவி கல்வியில் புத்திசாலியாக உள்ளார். 17 வயது நிரம்பாத அவரை சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதித்து உள்ளது. தற்போது வயதின் காரணமாக நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றால், அவருக்கு ஓர் ஆண்டு வீணாகி போய்விடும்' என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘அரசியல் ஞானம் அதிகம் உள்ளது என்று கூறி 18 வயது பூர்த்தி ஆகாத ஒருவரை பொது தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பித்த நீதிபதிகள், நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உள்ளனர்.

Tags:    

Similar News