லைஃப்ஸ்டைல்
கோப்புப்படம்

கல்வி தானம் இப்படியும் செய்ய முடியும்

Published On 2021-02-17 06:29 GMT   |   Update On 2021-02-17 06:29 GMT
நீங்கள் செய்யும் கல்விதானம் காலத்திற்கும் அழியாதது. ஆக நாம் பிறந்ததில் ஒரு துளியாவது உலக நன்மைக்காக அமைவது குறித்து மகிழ்வு கொள்வோம்! இன்றே செய்வீர் கல்வி தானம்.
கல்வி என்பது வெறும் எழுதுவதும், படிப்பதும் அல்ல. ஒருவரின் அறிவு பெருகவும், அவரது வாழ்க்கை உயரவும் அடிப்படையானது கல்விதான். கல்வி அறிவு பெற்ற ஒருவரால் பிறரைச் சார்ந்திராது கவுரவத்துடன் வாழ முடியும். கல்வி என்பது எந்த ஒரு விஷயத்திலும் அதன் காரணத்தை அறிவது ஆகும். எழுத, படிக்க கற்றுக் கொள்வதன் மூலம்தான் காரண அறிவினைப் பெற முடியும். இந்த காரண அறிவுதான் அனைத்து நாடுகளின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆகின்றது.

• பல பிரிவுகளில் பாடங்களை படித்து, புரிந்து அதனை அவரவர் வாழ்வில் பயன்படுத்துவதே படிப்பு. இந்த பயன்பாட்டின் மூலம் ஒருவர் தன் வாழ்வின் தரத்தினையும், மற்றவர்களின் வாழ்வின் தரத்தினையும் உயர்த்த முடியும்.
• படிப்பு வாழ்வின் பல உண்மைகளை நம்மை அறிய வைக்கும்.
• கல்வியால் மட்டுமே உலகை வெல்ல முடியும். கத்தியால் அல்ல.
• கல்வியை கொண்டு நாம் வாழ்வினை கற்பதில்லை. மாறாக வாழ்வே கல்விதான்.
• கல்வி ஒன்றே ஒருவருக்கு என்றும் குறையாத மரியாதையினையும், மதிப்பினையும் சமுதாயத்தில் பெற்றுத் தருகின்றது. இதனைத்தான் நம் முன்னோர், “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்றனர்.
• வெற்றிகளை குவிக்கும் மன்னர்கள் கூட கற்றறிந்த சான்றோர்களையே தன் ஆலோசகர்களாக வைத்திருந்தனர்.
• குழந்தைகளுக்கும், இளைய சமுதாயத்திற்கும் கல்வி ஒன்றே அவர்களின் வாழ்க்கையும், வருங்காலமும் ஆகும்.இவர்களே நாட்டின் வருங்கால தூண்கள்.

சிறு வயதில் கற்கும் கல்வி அக்குழந்தைகளின் வாழ்வின் அடிப்படை ஆகும். இக்குழந்தைகள் உடல் நலத்தோடும், மன நலத்தோடும் வளர்ந்து உயர் நிலை அடைய இக்கல்வி உதவும். சிறு வயதில் மனதில் படியும் நல்ல கருத்துகளே எதிர் காலத்தில் அவர்களால் சமுதாயத்தில் நிகழும் தீமைகளை அழிக்க உதவும். கல்வி மனதில் உறுதியினை உண்டாக்கும் வலிமை படைத்தது. மனிதன் உலகில் வாழவும், உலகை எதிர் கொள்ளும் சக்தியையும் கல்வி வெகுவாய் அளிக்கின்றது. படிக்கும் பிள்ளைகள் நல்ல பிரஜைகளாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

கல்விக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

• மனிதனுக்கு உறுதியான நிலையான வாழ்வினை கல்வியே அளிக்க முடியும்.
• மனித வாழ்வின் தரத்தினை கல்வியே உயர்த்துகின்றது.
• கல்வியே ஒருவருக்குத் தன்னம்பிக்கையினைத் தரும்.
• கல்வி அறிவு மனிதனை அநேக நேரங்களில் தவறான வாழ்க்கைக்குச்செல்லாமல் தவிர்த்து விடுகின்றது. 
• வாழ்வு மகிழ்ச்சியானதாக மாற மனிதனுக்கு கல்வியே அவசியமாகின்றது.
• நல்ல வேலையும், சம்பளமும் கல்வியால் எளிதாய் கிடைக்கின்றது.
• நாட்டின் வளம் ஓங்குகின்றது.

உணவு, பொருள், செல்வம் இவற்றினைப் போல் அல்லாது கல்வி குறையவும் குறையாது. முடிந்தால் கூடிடவும் செய்யும். கைவசமே இருக்கும். திருட்டே போகாது.

இப்படிப்பட்ட கல்வியினை நாம் நம் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது அளித்து விடுகின்றோம். மிக நல்லது. பாராட்டுதற்குரியது. ஆனால் அது மட்டுமே போதுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்ன காரணம்? இப்பொழுது அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் விடுமுறை முடிந்து திறக்க இருக்கின்றன. நடுத்தர வர்க்கம் கூட பள்ளிச் செலவுகளால் சற்று கஷ்டப்படும் காலம். 

தண்ணீருக்காக குடத்தினை எடுத்துக்கொண்டு இரவு, பகலாய் அலைவதும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதுமே மிகப் பெரிய பிரச்சனையாக அநேகருக்கு இருக்கும் கால கட்டமாக இப்போது உள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகளான புத்தகம், உடை, வாட்டர் பாட்டில், ஷ¨, பள்ளி கட்டணம் என எத்தனை கஷ்டங்கள் இருக்கும் என்பதனை சற்று சிந்திப்போமா! இவர்களுக்கு நாம் எந்த விதத்திலாவது உதவிட முடியுமா என்று யோசித்து இருப்போமா? சரி இவர்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று நினைத்தால் இவர்களை எங்கு தேடி செல்வது என்று நினைக்கின்றீர்களா? எங்கும் செல்ல வேண்டாம்.

உங்கள் கண் எதிரிலேயே இருக்கின்றார்கள். உங்கள் வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய வரும் உதவியாளர்களை சற்று உற்றுப் பாருங்கள். ஒரு நாள் அவர்கள் வரவில்லையென்றால் நமக்கு வாழ்வே இருண்டுவிடும். அவர்களுக்கு 2 வேளை உணவோ, நல்ல நாளோ, பண்டிகையோ, உடல் நல பாதிப்போ, குடும்ப பாதிப்போ இல்லாத ரோபோக்களாக அவர்களை நடத்துவார்கள் அநேகர். ஒருநாள் லீவுக்கு கறாராய் சம்பளம் பிடிக்கும் தனவான்களும் நம்மிடையே நிறைய உண்டு.

நம்மை நாம் சற்றாவது மாற்றிக் கொள்வோமே! நம் வீட்டு உதவியாளர்களின் பிள்ளைகளுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய அளவு உதவி செய்யலாமே.

• கல்வி கட்டணத்திற்காக முடிந்த அளவு கொடுக்கலாம்.
• பள்ளிப்பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், ஷ¨, செருப்பு, யூனிபார்ம் வாங்கிக் கொடுக்கலாம்.
• நம் குழந்தைகள் படித்த பழைய புத்தகங்களை கொடுக்கலாம்.
• எதுவுமே முடியாதா? அவர்கள் படிக்கும் பள்ளிக்கு செல்லுங்கள். அவர்கள் டீச்சரோடு அவர்களைப் பற்றி கேட்டறியுங்கள். தேவைப்படின் வாரம் இருமுறையாவது அவர்களுக்கு இலவச டியூசன் எடுக்கலாமே.

உண்மையில் நாம் ஒருவருக்கு செய்யும் உதவி அவருக்கே தெரியாமல் செய்வதே உயர்ந்தது ஆகும். நூறு ரூபாய் டியூப்லைட்டில் உபயம் என தனது பெயரினை கொட்டை, கொட்டையாய் டியூப் லைட்டினை விட பெரிதாய் எழுதி விளம்பரப்படுத்தும் பலர் நம்மிடமே உள்ளனர். 

அது போல் கல்வி தானத்திலும் நாம் செய்து விடக்கூடாது. நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் வேண்டுமெனில் நம் குழந்தைகள் மட்டும் படித்தால் போதாது. அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாதுகாப்பான சமுதாயம் அமையும். ஆக நாம் செய்யும் எந்த தானத்திலும் நாம் உணராவிட்டாலும் சிறிது சுய நலம் கலந்து தான் உள்ளது. பரவாயில்லை. அனைவரும் ஒரு குழந்தைக்காவது கல்வி உதவி செய்து ஆத்ம திருப்தி பெறுவோம்!

அதிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி இந்த காலத்தில் எத்தனை அவசியம் தெரியுமா? ‘பெண் படித்தால் ஒரு குடும்பமே படித்ததற்கு சமம்’ என்பது மிக உண்மையே. மேலும் கல்விதான் ஒரு பெண்ணுக்கு தன்னைக் காத்துக் கொள்ளும் திறனையும், தன்னம்பிக்கையினையும், தைரியத்தினையும், சமயோசித புத்திசாலி தனத்தினையும் அளிக்கின்றது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகு குணங்கள் மிக அவசியமாகும்.அதற்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி அவசியம். அன்றாடம் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை கேட்கும், பார்க்கும் அவல நிலை நீங்க பெண் குழந்தைகளுக்கும் கல்வி தானம் செய்யுங்கள்.

உடனே உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆதரவற்றோருக்கு உதவும் பல நல்ல சேவை நிறுவனங்களை சரி பார்த்து அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடியும் பொழுது தனியாகவோ, கூட்டாகவோ உங்களால் முடிந்ததைச் செய்யலாமே!

நீங்கள் செய்யும் கல்விதானம் காலத்திற்கும் அழியாதது. ஆக நாம் பிறந்ததில் ஒரு துளியாவது உலக நன்மைக்காக அமைவது குறித்து மகிழ்வு கொள்வோம்!
இன்றே செய்வீர் கல்வி தானம்.
Tags:    

Similar News