செய்திகள்
மரணம்

கூடலூர் அருகே மொபட்டில் சென்ற முதியவர் யானை தாக்கி பலி

Published On 2021-07-21 10:59 GMT   |   Update On 2021-07-21 10:59 GMT
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த மசினகுடி அருகே மொபட்டில் சென்ற முதியவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த மசினகுடி அருகே உள்ளது மாவனல்லா கிராமம்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ்(வயது63). இவர் அந்த பகுதியில் தனியாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இவர் தினமும் காலையில் தனது மொபட்டில் மசினகுடியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு தனது வேலைகளை தொடங்குவது வழக்கம்.

மசினகுடி பகுதியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருப்பதால் கடும் மேகமூட்டம் நிலவுகிறது. இதனால் எதிரே வரும் எந்த வாகனங்களோ, ஆட்களோ கண்ணுக்கு தெரிவதில்லை. மழையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை இருதயராஜ் தனது வீட்டில் இருந்து மசினகுடியில் உள்ள தேவலாயத்திற்கு மொபட்டில் புறப்பட்டார்.

இருதயராஜின் மொபட் மசினகுடி- மாவனல்லா மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென சாலைக்கு வந்து, இருதயராஜை துரத்தியது. இதனால் அச்சம் அடைந்த இருதயராஜ் வேகமாக மொபட்டை இயக்க முயற்சித்தார்.

ஆனால் அதற்குள்ளாகவே யானை அவரை மொபட்டில் இருந்து தூக்கி சாலையில் வீசியது. பின்னர் அவரை காலால் மிதித்து தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த இருதயராஜ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சத்தம் போட்டனர். இதனால் யானை அங்கிருந்து ஓடியது. இதையடுத்து உயிருக்கு போராடிய இருதய ராஜை மீட்டு சிகிச்சைக்காக மசினகுடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே இருதயராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News