உள்ளூர் செய்திகள்
கண்காணிப்பு கேமரா

சென்னை மாநகராட்சி தேர்தல்- ரூ.6 கோடி செலவில் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமரா வாங்க திட்டம்

Published On 2022-01-29 08:40 GMT   |   Update On 2022-01-29 10:30 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வீடியோவில் பதிவு செய்வதற்காக சி.சி.டி.வி. கேமராக்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. ஏற்கனவே வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடிகள் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார்படுத்தும் பணிகள் மணலியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் தேர்தலை வீடியோவில் பதிவு செய்வதற்காக சி.சி.டி.வி. கேமராக்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆண்கள், 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண்கள், 1,576 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டுப்பதிவுக்காக 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற தேர்தலில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்ய ரூ. 5.88 கோடி செலவில் 6 ஆயிரம் சி.சி.டி.வி. கேமராக்கள், டேபிள்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள், வாக்குச்சாவடிகள், ஓட்டுப்பதிவுக்கு பிறகு மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், உதவி வருவாய் அலுவலகங்கள் ஆகியவற்றில் இவை பொருத்தப்பட உள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட வசதிகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Tags:    

Similar News