செய்திகள்
கோப்புப்படம்

‘தேனி காவலன்’ என்ற பெயரில் செல்போன் ஆப் தொடக்கம்

Published On 2019-11-01 10:44 GMT   |   Update On 2019-11-01 10:44 GMT
தேனி மாவட்ட போலீஸ்துறையின் உதவியை 24 மணி நேரமும் பெறும் வகையில் ‘தேனி காவலன்’ எனும் பெயரில் புதிய செல்போன் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
தேனி:

தேனி மாவட்ட போலீஸ்துறை சார்பாக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக காவல்துறையின் உதவி தேவைப்படும் போது தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேனி மாவட்ட போலீஸ்துறையின் உதவியை 24 மணி நேரமும் பெறும் வகையில் ‘தேனி காவலன்’ எனும் பெயரில் புதிய செல்போன் செயலி (ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செல்பொன் ஆப்பை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இந்த செயலியில் தற்போது பொதுமக்கள் தேனி மாவட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது அதன் விபரத்தை தேனி காவலன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் விபரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உங்களது வீடு போலீஸ்துறையினரால் கண்காணிக்கப்படும்.

மேலும் நாம் அன்றாட வாழ்கையில் சந்திக்கும் குற்ற சம்பவங்கள், வாகன விபத்துக்கள் போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேனி காவலன் செயலி மூலம் அனுப்புவதால் போலீஸ்துறையினரால் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றங்கள் தடுக்கப்படும். இந்த செயலி மூலம் எந்த இடத்திலிருந்தும் தேனி மாவட்ட போலீஸ்துறையின் உதவியை பெறலாம். பொதுமக்கள் தாங்கள் பதிவிடும் புகார்கள் மற்றும் அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படும்.

இதேபோன்று “யூடியூப் சேனல்” தேனி மாவட்ட போலீஸ் என்ற பெயரில் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனல் மூலம் தேனி மாவட்ட போலீஸ்துறை சார்பாக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போலீஸ்துறை பொதுமக்கள் நல்லுறவு சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்த யூடியூப் சேனல் மூலம் பார்த்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேற்கண்ட செல்போன் வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News