லைஃப்ஸ்டைல்
காலை நடைப்பயிற்சி தான் இதயம், நுரையீரலுக்கு நல்லது

காலை நடைப்பயிற்சி தான் இதயம், நுரையீரலுக்கு நல்லது

Published On 2021-04-17 02:40 GMT   |   Update On 2021-04-17 02:40 GMT
ரத்தத்தில் ஆக்சிஜன் சுமக்கும் திறன், செல்களை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்துவது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு காலை நடைப்பயிற்சி உதவுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

நடைப்பயிற்சியை செய்வது இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலர் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் இதயம், நுரையீரலுக்கு மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைவிட காலையில் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஆஸ்பத்திரி ஒன்று தினமும் நடைப்பயிற்சி செய்யும் 203 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் காலையில் நடைப்பயிற்சி செய்வது இதய துடிப்புக்கும், நுரையீரலுக்கும் மிகவும் பயன் அளிப்பதாகவும் மாலை நடைப்பயிற்சியை விட நல்லது என்றும் தெரிவித்தது. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

நமது நுரையீரல் 4.5 லிட்டர் காற்றை எடுத்து கொள்ளும். ஆனால் பெரும்பாலான இந்தியர்களின் நுரையீரல் 2 லிட்டருக்கு குறைவான காற்றையே எடுத்து கொள் கிறது. இதற்கு உடற்பயிற்சி செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் 2,475 மில்லி லிட்டர் காற்றை உள் வாங்குகிறார்கள். இது மாலையில் நடைப்பயிற்சி செய்பவர்களைவிட 216 மில்லி லிட்டர் அதிகம்.

காலை 5 முதல் 6 மணி வரை நடைப்பயிற்சி செய்யும் போது அதிகபட்ச திறன் உருவாகுவது நிரூபிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதேபோல் காலை நடைப்பயிற்சியில் இதயதுடிப்பு மாலை நடைப்பயிற்சியைவிட சீராக இருக்கிறது. காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 65 முதல் 70 வரை இருக்கிறது என்றும், அந்த அளவு மாலையில் 85 ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காலை நடைப்பயிற்சி நமது உடலின் திறனை மேம்படுத்த தகுந்தது. காலை வேளையில் வெப்ப நிலையும், சுத்தமான காற்றும் நல்ல பலன் தரும்.

ரத்தத்தில் ஆக்சிஜன் சுமக்கும் திறன், செல்களை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்துவது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு காலை நடைப்பயிற்சி உதவுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News