செய்திகள்
நீதிமன்றம்

பெண்ணை கடத்தி கற்பழிக்க முயன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை: அபுதாபி குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2021-02-21 02:40 GMT   |   Update On 2021-02-21 02:40 GMT
அபுதாபியில் பாலைவனப் பகுதியில் பெண்ணை கடத்தி கற்பழிக்க முயன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
அபுதாபி:

அபுதாபி பகுதியில் உள்ள பாலைவனப் பகுதிக்கு சம்பவத்தன்று 3 பேர் பெண் ஒருவரை கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். அப்போது அப்பெண் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து சென்றார். பின்னர் உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் தேடப்பட்ட 3 பேரும் போலீசில் சிக்கினர். அதில் ஒருவர் போலீசின் பிடியில் இருந்து தப்பிக்க போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தி தப்ப முயற்சி செய்தார். எனினும் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்கள் அபுதாபி குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, அவர்கள் 3 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கூடுதல் தண்டனைகளும், அபராதமும் வழங்கப்பட்டது.

அதன்படி, முதலாவது நபர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கூடுதலாக 3 வருட சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியதற்காக மேலும் 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது ஓட்டுனர் உரிமத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதேபோல போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக, 2-வது நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் திர்ஹாம் அபராதமும், மூன்றாவது நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டையும், 50 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பே முதல் குறிக்கோள் என்பதை கருத்தில் கொண்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
Tags:    

Similar News