செய்திகள்
சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

Published On 2021-09-04 03:18 GMT   |   Update On 2021-09-04 03:18 GMT
செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் கோர்ட்டு காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
செங்கல்பட்டு:

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதுக்கு பின்னர் சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் கேட்டு வரும் நிலையில் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

அதில் பள்ளி ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆண்மை இல்லாத நான் எப்படி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் என வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதே காரணத்தை கூறி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சிவசங்கர் பாபா மீது இருக்கும் 3 போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்த காரணத்தால் புழல் சிறையில் இருக்கும் அவர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து வரும் 17-ந் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் வெளியே வந்த சிவசங்கர் பாபாவை பார்த்து அவரது பக்தர்கள் அவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் முழங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர், சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.
Tags:    

Similar News