செய்திகள்
உடலை கடித்து இழுக்கும் நாய்

அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ

Published On 2020-11-27 05:07 GMT   |   Update On 2020-11-27 10:14 GMT
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், இறந்துபோன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சம்பால்:

உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்தார். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ஸ்ரெச்சர், அரசு மருத்துவமனையின் படிக்கட்டின் அடியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை. அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய், சிறுமியின் உடலை கடித்தது. 

இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அரசு மருத்துவமனையின் அலட்சியத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். 

அந்த சிறுமி மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்துவிட்டாரா அல்லது வந்தபின்னர் இறந்தாரா? என்ற விவரம் தெரியவில்லை. உரிய நடைமுறைகளுக்கு பிறகு சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனையில் தெருநாய் தொந்தரவு அதிகம் இருப்பதாகவும், இதுபற்றி அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

‘சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என குடும்பத்தினர் கூறினர். அதனால் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை எடுத்துச் சென்றனர். நாய் வந்து கடித்தபோது அதனை அவர்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம்’ என மருத்துவமனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் கூறியதாக மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சியும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வார்டு பாய் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். 
Tags:    

Similar News