செய்திகள்
சண்டை களத்துக்கு தயாராகும் சேவல்கள்

தஞ்சையில் பொங்கல் பண்டிகையையொட்டி சண்டை களத்துக்கு தயாராகும் சேவல்கள்

Published On 2020-01-09 10:53 GMT   |   Update On 2020-01-09 10:53 GMT
தஞ்சையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் சேவல்களுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.

பொங்கலையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல இடங்களில் நடைபெறும். இதேபோல் சேவல் சண்டை போட்டிகளும் நடைபெறும். ஜல்லி கட்டைபோல் சேவல் சண்டைகளையும் பார்ப்பதற்கு ஏராளமானோர் கூடுவார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் சேவல்களுக்கு 2 மாதத்திற்கு முன்பே பயிற்சி கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

தஞ்சை மாவட்டத்திலும் பொங்கலையொட்டி அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் சேவல் சண்டை போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது சேவல்களுக்கு அதன் உரிமையாளர்கள் போர்க்கள பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.தஞ்சையில் சீனிவாசபுரம் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் சண்டை சேவல்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் சேவல்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் மும்முரமாக நடந்து வருகிறது. போட்டியில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது பற்றிய வித்தையை சேவல்களுக்கு கற்று கொடுக்கின்றனர். இதுகுறித்து சேவல் உரிமையாளர்கள் கூறியதாவது:-

சேவல் சண்டை என்பது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டை போல் சேவல் சண்டை போட்டியையும் காண்பதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டுவர். தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக சேவல்களை தயார் செய்து வருகிறோம். தொடர்ந்து 21 நாள்கள் பயிற்சி அளித்து வருகிறோம்.

இந்தப் பயிற்சியின் போது ஒரு சேவல் 1½ கிலோ பாதாம் பருப்பு சாப்பிட்டு விடும். இதற்காக 25 பாதாம் பருப்பை மிக்சியில் அரைத்து உருண்டை போல் எடுத்து சேவல்களுக்குக் கொடுப்போம். தினமும் 3 முட்டை, சத்து மாத்திரைகள், கேப்பை, கம்பு, உளுந்து, பாசிப்பயறு, கானம், ரத்த சூரி விதை, வெந்தயம், மிளகு இவற்றை மாவு போல் அரைத்து கலப்பு உணவு தினமும் கொடுத்து வருகிறோம். இது தவிர ஒரு நாள் விட்டு ஒரு நாள் 20 நிமிடம் நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். இறக்கை தேய்ப்பு, நெஞ்சு தேய்ப்பு போன்ற உடற்பயிற்சிகள் தினமும் நடக்கும். பயிற்சி முடிந்ததும் தினமும் ஆட்டு சுவரொட்டி அல்லது மாட்டு சுவரொட்டி சேவலுக்கு வழங்குவோம்.

அதோடு மட்டுமில்லாமல் ஆட்டு எலும்பு மூட்டு வாங்கி இடித்து மாவுடன் கலந்து கொடுப்போம். இப்படி நாங்கள் தீவிர பயிற்சி கொடுத்து வருகிறோம். போட்டி நடைபெறும் இரண்டு நாட்கள் முன்பு வேப்ப இலை ,நொச்சி இலை, தும்பை இலை , புளிய இலை, துளசி போன்ற மூலிகைகளை கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் கலந்து குளிக்க வைப்போம். இப்படி பல்வேறு கட்ட பயிற்சிகளை அளித்து போட்டிக்கு அனுப்புவோம். தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் போட்டியை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றனர்.
Tags:    

Similar News