சிறப்புக் கட்டுரைகள்
சரத்குமார் - குஷ்பு

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - கொட்டபாக்கும், கொழுந்து வெற்றிலையும்

Published On 2022-01-10 10:13 GMT   |   Update On 2022-01-10 10:13 GMT
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நாட்டாமை என்றால் சும்மாவா... மீசை முளைக்காத சிறுவர்கள்கூட மீசையை தடவிக்கொண்டு “நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுது” என்று பட்டிதொட்டி எல்லாம் பேச வைத்த படம்.

சரத்குமாரோடு நான் பல படங்களில் நடித்திருந்தாலும் நாட்டாமை படமும், அதில் இடம் பெற்ற பாடல்களும் அந்த அளவுக்கு சூப்பர்ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத வெற்றியில் எங்களை சந்தோ‌ஷபடுத்திய படம் நாட்டாமை.

சரத்குமாரும் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவரோடு இணைந்து நடித்த படங்கள் பேர்சொல்லும் படங்களாகவே அமைந்தது. நடிப்பதில் எந்த பாத்திரம் கிடைத்தாலும் சிரத்தை எடுத்துக் கொண்டு நடிப்பார்.

சிம்மராசி படத்தில் ஒரு கோவிலில் சூட்டிங் நடத்தப்பட்டது. கோவில் என்பதால் காலில் செருப்பு அணிந்து செல்ல முடியாது. நான்கைந்து நாட்கள் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஒரு காட்சியில் நடித்தார். அப்போது கடுமையான வெயில் என்பதால் அவரது கால் முழுவதும் கொப்பளமாகி ரத்தம் கசிந்து இருக்கிறது. அதை கூட கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அந்த காட்சியில் நடித்து முடித்தார். காட்சி முடிந்த பிறகு அவரது காலை பார்த்த எல்லோருமே அதிர்ந்து போனோம்.

வேடன் படப்பிடிப்புக் காக இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்றிருக்கிறோம். சரத் நல்ல நண்பர் மட்டுமல்ல உரிமையோடு, அவரிடம் சண்டை போட்ட காலங்களும் உண்டு. ஆனால் எதற்கு சண்டை போட்டோம்? ஏன் பேசாமல் இருந்தோம் என்பது கூட எங்களுக்கு தெரியாது.

இருவரும் சண்டைக் காரர்களாகவே இருந்தும் ஒரு டூயட் பாடலில் கூட நடித்து இருக்கிறோம். ஆனால் இருவரும் பேசாதவர்கள் என்று படத்தை பார்த்தால் கொஞ்சம் கூட தெரியாது. அந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் கோபத்தை முகத்தில் காட்டாமல் நடித்தோம்.

தொழில் வேறு, தனிப்பட்ட பிரச்சினைகள் வேறு. அதுதான் கலைஞர்களின் குணம். சரத்துடன் நட்பு பாராட்டுவது, அரட்டை அடிப்பது, ஜாலியாக பேசுவது எல்லாம் பிடிக்கும். ஆனால் அவரோடு காரில் போவது மட்டும் எனக்கு பிடிக்காது. கார் இல்லாமல் நடுவழியில் நின்றாலும் அவருடன் செல்ல ஒத்துக்கொள்ளவே மாட்டேன். அதற்கும் ஒரு காரணம் உண்டு.

அடிக்கடி ஊட்டியில் படப்பிடிப்புக்கு செல்வோம். சென்னை திரும்புவதற்கு கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு விமானத்தை பிடிக்க வேண்டுமென்றால் நான் காலை 7 மணிக்கே ஊட்டியில் இருந்து கிளம்பி விடுவேன். ஆனால் சரத் 9 மணிக்கு பிறகுதான் புறப்படுவார். 2 மணி நேரத்தில்கூட கோவைக்கு சென்று விடுவார். அந்த அளவுக்கு மலைப்பாதையிலும் படுவேகமாக கார் ஓட்டுவார். பாதுகாப்பாகத் தான் ஓட்டுவார். ஆனா லும் அவர் செல்லும் வேகத்தை பார்த்தால் நமக்கு நெஞ்சு பதை பதைக்கும். அதனால் தான் அவருடன் காரில் ஏற மாட்டேன்.

பலமுறை ஊட்டியில் இருந்து கோவை செல்வதற்கு அவர் கூப்பிட்டதுண்டு. அப்போதெல்லாம் அய்யா வேண்டாம் சாமி கோவை செல்லும் வரை பதற்றமாக இருக்கும். நான் வேறு காரில் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிடுவேன்.

ஊட்டியில் நாட்டாமை படத்தின் படப்பிடிப்பு “கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்.... மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா தூள் பறக்கும்...” என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதுதான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு. அதை முடித்துவிட்டு இரவு கோவையில் இருந்து சென்னை செல்ல ரெயிலை பிடிக்க வேண்டும். அந்த ரெயிலை பிடிக்க வேண்டுமென்றால் மாலை 4 மணிக்காவது படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பி ஆக வேண்டும். எனவே மதிய உணவு இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்தது.

மதியம் சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு செல்வதை தவிர்த்து விட்டு அங்கேயே ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிடலாம் என்று சென்றால் மழைக்கு அப்படி என்ன கோபமோ திடீரென கொட்டி சாப்பிட விடாமல் துரத்தியது. வேறு வழியில்லாமல் ஒரே குடைக்குள் நான், சரத், ரவிக்குமார்சார் மூன்று பேரும் நின்றபடி ஒரே தட்டில் சாப்பிட்டோம்.

அப்போதெல்லாம் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது மில்லை. முக்கியமாக அந்த காலத்தில் இந்த மாதிரி செல்போன் வசதிகள் எதுவும் கிடையாது. கேரவன் கிடையாது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இஷ்டம் போல் எதையும் எடுத்து போட முடியாது.

கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். அதுதான் அவர்களை நினைத்து பார்க்க வைக்கும் அடையாளமாகவும் இருக்கும்.

தமிழில் எல்லா முன்னணி நடிகர் களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரிமும் மாறாமல் இருக்கும் குணாதிசயங்களை பார்த்து பல நேரங்களில் வியந்து போயிருக்கிறேன்.

1990-களில் ரஜினி சாருடன் தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன் படங்களில் நடித்தேன். அப்போது ஒருநாள் ஷூட்டிங் தளத்துக்கு சற்று தாமதமாக வந்தால் போதும், தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதற்கு அப்பாற்பட்டு எல்லோரிடமும் ‘சாரி’ கேட்பார்.

அவரது அந்த குணத்தை பார்த்து அப்போது நான் வியந்தது உண்டு. சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு 2021-ல் மீண்டும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடித்த படம் அது.

முதல் நாள் ஷூட்டிங் சென்ற போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி சாருடன் நடிக்க போகிறோம். இப்போது அவர் எப்படி இருப்பார் என்ற எண்ணம் இருந்தது.

அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததும் எல்லாம் மறைந்து போச்சு. 1990-களில் நான் பார்த்த அதே ரஜினி... அதே சுறு சுறுப்பு.... அன்று போலவே இன்றும் எல்லோரிடமும் பேசி பழகும் பண்பு...

சான்சே இல்லை. ரஜினிசார்... ரஜினி சார் தான்.

ஏங்க வைத்த படங்கள்

பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் நடிப்பு என்பது ஆர்வம். அந்த ஆர்வத்திற்கு எப்போதுமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. நல்ல கதையம்சம், வலுவான கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு படத்தை பார்த்தால் இந்த பாத்திரத்தில் நாம் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம் கலைஞர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். அதேபோல்தான் ஒரு வருடத்திற்கு 8 முதல் 10 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன். அதனால் தேடி வந்த பல பட வாய்ப்புகளை கால்ஷீட் கொடுக்க முடியாமல், நான் ஏற்க முடியாமல் போனது. அந்த வரிசையில் “வால்டர் வெற்றிவேல்”, “செந்தமிழ்பாட்டு”, “டூயட்”, “மே மாதம்”, “பிஸ்தா”, “தெய்வ வாக்கு” ஆகிய படங்களை நான் மிஸ் பண்ணியதாகவே இன்றும் உணர்கிறேன். அந்த படங்களை நான் பார்த்த போது எவ்வளவு அருமையான கதாபாத்திரம். நம்மால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டதே. நாம் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நான் நினைத்ததுண்டு. இது பொறாமை அல்ல. கலைஞர்களுக்கே உரிய இயல்பான மனோபாவம். 
Tags:    

Similar News