செய்திகள்
உதயகிரி கோட்டை மூடப்பட்டிருப்பதை காணலாம்

உதயகிரி கோட்டை பூங்கா திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2020-12-19 02:52 GMT   |   Update On 2020-12-19 02:52 GMT
உதயகிரி கோட்டை பூங்கா திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் வருவாய் இன்றி தொடர்ந்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பத்மநாபபுரம்:

தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் உதயகிரி கோட்டை உள்ளது. இந்த கோட்டை வேணாடு அரசரால் 1729-ம் ஆண்டு மண்கோட்டையாக கட்டப்பட்டது. பின்னர், மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் கற்கோட்டையாக மாற்றியமைக்கப்பட்டது.

அப்போது, கோட்டையை போர் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற் கூடமாகவும், சேமிப்பு கிடங்காகவும், சிறைகூடமாகவும் மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

இயற்கை எழில் சூழ்ந்த இந்த கோட்டை தற்போது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல்லுயிர் பூங்காவாக மாற்றப்பட்ட உதயகிரிகோட்டையில் மான், மயில், மீன் அருங்காட்சியகம், பறவைகளுடனான அலங்கார குடில்கள் உள்ளன.

மேலும், அங்குள்ள குளத்தில் படகுகள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் என பல உள்ளதால் குமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாபயணிகள் தவறாமல் உதயகிரிகோட்டை பல்லுயிர் பூங்காவுக்கு குழந்தைகளுடன் வந்து செல்வார்கள். இது மட்டுமின்றி குமரி மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் வாசிகளும் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் அதிகளவில் வந்து செல்வார்கள்.

கொரோனா பரவல் காரணமாக உதயகிரி கோட்டை பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிட கடந்த 9 மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது, கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் குமரியில் பல சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், உதயகிரிகோட்டை மட்டும் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் உதயகிரிகோட்டை பல்லுயிர் பூங்காவை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி வியாபாரிகள் கூறுகையில், பூங்கா திறக்கப்படாததால் கடந்த 9 மாதங்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். எனவே, வியாபாரிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குமரியில் பிற சுற்றுலா தலங்களை திறந்தது போல் உதயகிரிகோட்டை பல்லுயிர் பூங்காவை தூய்மைப்படுத்தி திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News