செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

டெல்லியில் வேகமாக பரவும் கொரோனா... அதிரடி முடிவு எடுத்த ஐகோர்ட்

Published On 2021-04-18 10:24 GMT   |   Update On 2021-04-18 10:24 GMT
டெல்லியில் நாளை முதல் வழக்கமான அல்லது அவசரமற்ற வழக்குகள் எதுவும் விசாரிக்கப்படாது என ஐகோர்ட் கூறி உள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாளை முதல் மிகவும் அவசரமான வழக்குகளை மட்டும் விசாரிக்க டெல்லி ஐகோர்ட் முடிவு செய்துள்ளது.



இந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மிக அவசர வழக்குகள் மட்டுமே திங்கள்கிழமை முதல் விசாரிக்கப்படும், வழக்கமான அல்லது அவசரமற்ற வழக்குகள் எதுவும் விசாரிக்கப்படாது என நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டெல்லி தலைநகர பிராந்தியத்தில் கொரோனா வைரசின் அபாயகரமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் 2021ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மிக அவசரமான விஷயங்களை மட்டுமே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கமான அல்லது அவசரமற்ற வழக்குகள் மற்றும் மார்ச் 22, 2020 மற்றும் டிசம்பர் 31, 2020க்கு இடையில் தாக்கல் செய்யப்பட்ட / பட்டியலிடப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அந்த வழக்குகள் ஒத்திவைக்கப்படும். தீவிர அவசரநிலை ஏற்பட்டால், கோரிக்கை வைக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News