ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் சகஸ்ர கலசாபிஷேக சேவையை ஆண்டு்க்கு ஒரு முறை நடத்த ஆலோசனை

Published On 2021-04-03 02:17 GMT   |   Update On 2021-04-03 02:18 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம் ஆகிய சேவைகளை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த ஆலோசனை நடத்தி வருவதாக முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலை :

திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ.) நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகளை கேட்டு பதிவு செய்து கொண்டார்.

அப்போது பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதற்கு கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்த பதில்களும் வருமாறு:-

வெங்கட், பிதாபுரம்: பக்தி சேனலில் அதிகளவில் காணிக்கை பற்றிய விளம்பரம் ஒளிப்பரப்பப்படுகிறது. திருமலையில் தங்கும் விடுதி அறைகளில் இருந்த வெங்கடாஜலபதி புகைப்படத்தை மீண்டும் வைக்க வேண்டும். அறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஜவகர்ரெட்டி: பக்தி சேனலில் காணிக்கை வழங்கிய பக்தர்களை மட்டுமே அதிகளவில் ஒளிப்பரப்புகிறோம். காணிக்கைக்கான பிரசார நேரம் குறைக்கப்படும். திருமலையில் உள்ள அனைத்து விடுதி அறைகளிலும் பழுதுப் பார்ப்பு பணிகளை மே மாதத்துக்குள் முடிக்கப்படும். அறைகள் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சத்தியநாராயணா, ராஜமுந்திரி: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. தரிசன டோக்கன்கள் பெற்ற அன்றே பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். தரிசன டோக்கன் பெற்று 2 நாட்களுக்கு பிறகு கோவிலில் அனுமதிப்பதும், அதற்காக 2 நாட்கள் திருப்பதி, திருமலையில் பக்தர்கள் தங்கியிருப்பதும் சங்கடமாக உள்ளது.

ஜவகர்ரெட்டி: இந்தப் புகாரை அனைத்துப் பக்தர்களும் ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளனர். கூட்டம் குறைவாக இருந்தால் அன்றே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கிறோம். கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரு நாள் விட்டு மறு நாள் அல்லது 2 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கிறோம்.



பிரபாகர், பெங்களூரு: திருமலையில் தியான மண்டபம் கட்டப்படுமா?

ஜவகர்ரெட்டி: திருமலையில் உள்ள ஆஸ்தானம் மண்டபத்தில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அங்குச் சென்று பக்தர்கள் தியானம் செய்யலாம்.

சீனிவாஸ், நெல்லூர்: திருமலையில் உள்ள ஓட்டல்களில் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியலை விட, இரு மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஜவகர்ரெட்டி: ஓட்டல்களில் வைத்துள்ள விலை பட்டியல் படி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? எனப் பரிசீலனை செய்வோம். அதற்காக இலவச தொலைப்பேசி எண் குறிப்பிடப்படும். அதில் பக்தர்கள் ெதாடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேற்கண்டவாறு பக்தர்கள் ெதரிவித்த புகார்களுக்கு ஜவகர்ரெட்டி பதில் அளித்தார்.

கூட்டத்தில் கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, பக்தி சேனல் அதிகாரி சேஷாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி மேலும் கூறுகையில், உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமிக்கு வாரத்தில் திங்கட்கிழமை அன்று விசேஷ பூஜை நடந்து வந்தது. அதேபோல் புதன்கிழமை அன்று சகஸ்ர கலசாபிஷேகம் நடந்து வந்தது.

மேற்கண்ட இரு சேவையின்போது உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு வந்தது. அதில் உற்சவர் சிலைகளுக்கு சில சங்கடம் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆகம சாஸ்திர விதிப்படி ஆண்டுக்கு ஒரு முறை இரு சேவைகளை நடத்த ஆலோசனை செய்து வருகிறோம், என்றார்.
Tags:    

Similar News