ஆன்மிகம்
கண் இன்றியும் சிவனுக்கு களப்பணி செய்தவர்

கண் இன்றியும் சிவனுக்கு களப்பணி செய்தவர்

Published On 2021-04-06 07:37 GMT   |   Update On 2021-04-06 07:37 GMT
சுயநலம் இன்றி இறைவனிடம் பக்தி செலுத்தியவர்கள்தான், பின்னாளில் இறைவனின் அருளுக்கு பாத்திரமாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான், தண்டியடிகள்.
8-4-2021 தண்டியடிகள் குரு பூஜை

தன்னலம் இன்றி பணியாற்றிவர்களே, வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதே போலத்தான், சுயநலம் இன்றி இறைவனிடம் பக்தி செலுத்தியவர்கள்தான், பின்னாளில் இறைவனின் அருளுக்கு பாத்திரமாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான், தண்டியடிகள். இவர் திருவாரூரில் அவதரித்தவர். பிறப்பிலேயே இருவருக்கு கண் பார்வை கிடையாது. சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டிருந்த தண்டியடிகள், தன்னுடைய அகக்கண் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார்.

அடியவர்களுக்கும், கோவிலிலும் சிறுசிறு தொண்டு செய்து வாழ்ந்த தண்டியடிகள், தினமும் இறைவனின் ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் வழிபட்டு வந்த திருவாரூர் சிவாலயத்தின் திருக்குளம் மிகவும் சீர்கேடாகக் கிடந்தது. அதற்கு அந்தத் திருக்குளத்தைச் சுற்றிலும் சைவநெறி எதிர்ப்பாளர்கள் சிலர் இருந்ததே காரணமாகும்.

இதுபற்றி அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தின் நிலையை எண்ணி மனம் கலங்கியதோடு, அந்தக் குளத்தை தூர்வாரி சீர் செய்யவும் முன் வந்தார். குளத்தின் நடுவில் ஒரு கம்பும், குளக் கரையின் மேட்டில் ஒரு கம்பும் நட்டு, இரு கம்பு களையும் இணைக்கும்படி கயிறு ஒன்றை கட்டினார். கயிற்றைப் பிடித்தபடியே குளத்தில் இறங்கி மண்ணை கூடையில் எடுத்து வந்து கரை மேட்டில் கொட்டுவார். இப்படியே கயிறை பிடித்தபடியே சென்று திருக்குளத்தை தூர்வாரும் பணியைச் செய்து கொண்டிருந்தார். அந்த சிவதொண்டு செய்த நேரத்திலும் கூட, அவரது வாய், ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிப்பதை நிறுத்துவது இல்லை.

தண்டியடிகளின் இந்தத் தொண்டால், வெகு விரைவிலேயே குளம் சுத்தமாகி, ஆழம் ஏற்பட்டு, தண்ணீர் பெருகத் தொடங்கியது. இதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், தண்டியடிகளிடம் வந்து திருக்குள திருப்பணியை நிறுத்தும்படி கூறினர்.

அதற்கு தண்டியடிகள், “இது சிவபெருமானை நினைத்து, சிவனுக்காகவும், அவனது அடியார்களுக்காகவும் செய்யப்படும் திருப்பணி. அதை நிறுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தார்.

அதற்கு திருக்குளத்தைச் சுற்றி குடியிருந்த சைவ எதிர்ப்பாளர்கள், “உனக்கு கண் இல்லை என்றால், காதும் கேட்கவில்லையா? நாங்கள் சொல்வதை கேட்டு இங்கிருந்து போய்விடு” என்று மிரட்டும் தொனியில் பேசினர்.

“எனக்கு கண்கள் இல்லையே என்று நான் என்றுமே வருந்தியதில்லை. நான் அகக்கண் கொண்டு, ஈசனின் திருவடியை மட்டுமே தரிசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை நான் வணங்கும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தால், என்னுடைய கண்கள் ஒளி பெற்று, உங்கள் கண்கள் ஒளியை இழந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று வாதிட்டார், தண்டியடிகள்.

“அப்படி ஒன்று நடந்தால், நாங்கள் இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம்” என்று கூறிய எதிர்ப்பாளர்கள், தண்டியடிகளை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

வருத்தம் கொண்ட தண்டியடிகள், ஈசனின் சன்னிதி முன்பு அமர்ந்து தன்னுடைய நிலையைச் சொல்லி முறையிட்டார். அப்படியே உறங்கியும் போனார். அவரது கனவில் தோன்றிய ஈசன், “மனக்கவலையை விடு. உன்னுடைய சபதம் நாளை நிறைவேறும்” என்று அருளினார்.

அதோடு, அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் கனவிலும் தோன்றிய சிவபெருமான், “தண்டி என்னும் அன்பன், எமக்கு குளம் சீர்செய்யும் பணி புரிகிறான். அவனுக்கு சிலர் இடர் செய்கிறார்கள். நீ போய் அதைச் சரிசெய்” என்று உத்தரவிட்டார்.

மன்னன் திடுக்கிட்டு எழுந்தான். இறைவனின் கருணையை எண்ணி மகிழ்ந்தான். அதிகாலையிலேயே தண்டியடிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தான். எதிர்ப்பாளர்களை வரவழைத்து விசாரணை நடத்தினான். அவர்கள், “தண்டி கண் ஒளி பெற்றால், நாங்கள் இந்த ஊரை விட்டே போய் விடுகிறோம்” என்றனர்.

அவர்களின் சபதத்தை ஏற்ற தண்டியடிகள், திருக்குளத்தை நோக்கிச் சென்றார். பின்னர் சிவனின் நாமத்தை உச்சரித்தப்படி திருக்குளத்தில் மூழ்கினார். அவர் எழுந்தபோது, அவரது கண்கள் ஒளி பெற்றிருந்தன. அதே நேரம் எதிர்ப்பாளர்களின் கண்கள் பார்வையை இழந்திருந்தன. தண்டியடி களின் இறை பக்தியை எண்ணி, மன்னன் உள்ளிட்ட அனைவரும் பரவசம் அடைந்தனர்.

எதிர்ப்பாளர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர். அதன்பிறகு பல காலம் இறைவனுக்கு தொண்டு செய்து வந்த தண்டியடிகள் நாயனார், இறுதியில் சிவபதம் அடைந்தார்.
Tags:    

Similar News