சிறப்புக் கட்டுரைகள்
கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

Published On 2021-12-08 10:49 GMT   |   Update On 2021-12-08 11:33 GMT
கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
தன் மகள் கதம்பமும், ஸ்ரீமடத்து சீடர்களும் தன்னைத் தேற்றுவதைப் பார்த்துக் கட்டுப்படுத்திக் கொண்டார் கதம்பத்தின் தந்தை.

இயலாமை ஒரு மனிதனை எப்படியெல்லாம் பேச வைக்கிறது பார்த்தீர்களா?

ஆயிரம் உறவுகள் இருந்தாலும், ஆயிரம் தோழமைகள் இருந்தாலும் என்ன பயன்? வாய்த்த தாயாருக்கும் வந்து சேர்ந்த மனைவிக்கும் இவர்கள் ஈடு இணை இல்லை.

ஒரு காலகட்டம் வரை தாயாரின் அரவணைப்பில் வளர்கிறோம். அதன்பின் மனைவியின் அன்பில் வாழ்கிறோம். இதுதான் வாழ்நாள் முழுக்க நம்மைக் கொண்டு செல்கிறது.

ஆனால், மனைவியோடு எத்தனை நாட்கள் இந்த பூமியில் வாழ்வு?

கணவனோடு மனைவிக்கு எத்தனை நாட்கள் வாழ்வு?

எவரேனும் சொல்ல முடியுமா? அல்லது கணிக்கத்தான் முடியுமா?

இந்த சோகம்தான் கதம்பத்தின் தந்தையாரை சுரத்து இல்லாமல் செய்தது.

நான்கு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகின்ற பொறுப்பு இருக்கிறபோது மனைவி தன்னை விட்டுப் பிரியப் போகிறாள் என்பதை அந்தக் கணவரால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

‘அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவள் இன்றி இந்தக் குழந்தைகளை நான் எப்படி வளர்த்து ஆளாக்குவேன்?’ இதுதான் பெரியவா சந்நிதியில் அவர் கொட்டியவை.

தந்தையார் சொன்ன அதே வார்த்தைகளைத் தன் பிரார்த்தனையாகவும் நடமாடும் தெய்வத்தின் முன் வைத்தார் கதம்பம்.

இவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்தார் பெரியவா. அதன் பின் அருகில் இருந்த மூங்கில்தட்டில் இருந்து ஒரு ஆப்பிளைக் கையில் எடுத்தார். வலது உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருந்தார். சட்டென்று தியான நிலைக்குச் சென்று விட்டார். மகானின் கண்கள் மூடி இருந்தன.

பதினைந்து இருபது நிமிடங்கள் அங்கே எந்த விதமான சலனமும் இல்லை. பேரமைதி.

பிறகு, தன் திருக்கண்களைத் திறந்தார் பெரியவா. அவரது திருமுகத்தைப் பார்க்கிறபோது மேகக் கூட்டங்களில் இருந்து ஞான சூரியன் வெளியே வந்தாற் போல் இருந்தது.

பக்கத்தில் இருந்த மரப் பேழைக்குள் விரல்களை விட்டு குங்குமத்தை அள்ளினார். இடக் கையில் வைத்திருந்த ஆப்பிள் பழத்தின் மேல் இந்தக் குங்குமத்தை அப்படியே போட்டார். ஆப்பிள் பழத்தை வலக் கைக்கு மாற்றிக் கொண்டார்.

கதம்பத்தின் தந்தையாரை கண் ஜாடையால் அருகே அழைத்தார் பெரியவா.

மிக பவ்யமாக வந்தவர், கலியுக தெய்வத்துக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

எழுந்து நின்றார். கைகளைக் கூப்பி கண்ணீருடன் இறைஞ்சினார்.

குங்குமத்தோடு காணப்பட்ட ஆப்பிளைக் கொடுத்தார்.

பெற்றுக் கொண்டபோது அவரது கண்களில் இருந்து தரதரவென்று நீர் சொரிந்தது.

கதம்பத்தின் தந்தையாரைப் பார்த்துப் பெரியவா சொன்னார்: ‘‘இந்த ஆப்பிள் பழத்தை நாளை காலை பத்தரை மணிக்குள் உன் மனைவி சாப்பிட்டு விட வேண்டும்.’’

பெரியவா சொன்னதைக் கேட்டு இருவரும் திக்பிரமை பிடித்தது போல் நின்றார்கள். காரணம், ‘நாளை காலை பத்தரை மணிக்கு மேல் உயிர் இருக்காது’ என்று மருத்துவமனையில் நேரம் குறித்திருந்தார்கள்.

அதே நேரத்துக்குள் இந்த ஆப்பிளை சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்று பெரியவா சொல்கிறார்.

உடலில் பரவசம் பொங்க, ‘‘அப்படியே பெரியவா...’’ என்றார் கதம்பத்தின் தந்தை. அடுத்து ஆப்பிளைக் கையில் வைத்துக் கொண்டே விடை பெற்றார்.

கதம்பமும் அவரது தந்தையாரும் அடுத்த விநாடியே வெளியே வந்தார்கள். பேருந்து நிலையம் வந்து சென்னைக்குச் செல்லும் பஸ்சில் ஏறினர்.

அடுத்த இரண்டு மணி நேரப் பயணத்தில் இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார்கள்.

‘ஆப்பிளை அம்மாவுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே... பெரியவா பிரசாதம் உள்ளே போக வேண்டுமே...’ மருத்துவமனைக்குள் நுழைந்த மறு விநாடியில் இருந்து இந்த எண்ணம்தான் கதம்பத்துக்கு.

தாயார் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் சென்றார்.

அப்போதுதான் அந்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது.

கதம்பத்தின் தாயாருக்குச் சில சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது பற்கள் முழுவதையும் அகற்றி விட்டிருந்தனர் மருத்துவர்கள். இந்த நிலையில் ஆப்பிளை எப்படி சாப்பிடக் கொடுக்க முடியும்?



துண்டு துண்டுகளாக நறுக்கிக் கொடுத்தால், அதைக் கடித்துச் சாப்பிட வாயில் பல் வேண்டுமே!

ஒரே ஒரு மாற்று வழிதான் தோன்றியது கதம்பத்துக்கு.

ஆப்பிளை அப்படியே நீரில் கொதிக்க வைத்து, அதை அப்படியே கைகளால் பிசைந்து ஜூஸ் ஆக்கிக் கொடுத்து விடலாம் என்று தீர்மானித்தார் கதம்பம்.

அதன்படி, மகா பெரியவா கொடுத்த ஆப்பிள் பிரசாதத்தை ஜூஸ் ஆக்கி அம்மாவுக்குக் கொடுத்தார்.

பிரசாதம் உள்ளே போக வேண்டும்... பழத் துண்டுகளாகப் போனால் என்ன... ஜூசாகப் போனால் என்ன... தாயாரின் வயிற்றுக்குள் பிரசாதம் போயாயிற்று.

ஒரு தகவலுக்காக இந்த வி‌ஷயத்தை மருத்துவர்களிடமும் சொல்லி விட்டார் கதம்பம்.

காரணம், அவர்களது கட்டுப்பாட்டில் சிகிச்சையில் இருக்கிறபோது, அவர்களுக்குத் தெரியாமல் எதையும் நோயாளிகளுக்கு நாம் கொடுக்கக் கூடாது. இது மருத்துவமனைகளின் விதி. இந்த விதியைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

‘ஆப்பிள் பழம்தானே... அதனால் ஒன்றுமில்லை’ என்று மருத்துவர்கள் கதம்பத்தின் செயலுக்கு ‘ஓகே’ சொல்லி விட்டனர்.

அன்றைய பொழுது முழுக்க ‘பெரியவா... பெரியவா...’ என்கிற அந்த மந்திரச் சொல்லையே கதம்பமும் அவரது தந்தையாரும் சொல்லி வந்தனர்.

அடுத்த நாள் பொழுதும் விடிந்தது.

கதம்பமும் அவரது தந்தையும் முதல் நாள் இரவு தூங்கவே இல்லை.

அவ்வப்போது அசதியின் காரணமாக கண்கள் சொருகினாலும், ‘பெரியவா’ ஜபத்தை விடவில்லை.

அதற்கும் ஒரு பலன் இருந்தது.

ஆம்! காலை பத்தரை மணியும் தாண்டியது.

கதம்பத்தின் தாயாருக்கு ஒன்றும் ஆகவில்லை.

மருத்துவர்களின் கணிப்பு பொய்த்துப் போனது.

மருத்துவர்களின் கணிப்பைத் தவறென்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. உள்ளதைத்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, கதம்பத்தின் தாயாரது உடல்நிலை செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து நேரம் நிர்ணயித்திருந்தார்கள்.

வந்த எமனும் ஏதோ வழி தவறி வந்து விட்டவன் போல், திரும்பச் சென்று விட்டான்.

சர்வேஸ்வரனான மகா பெரியவா, அந்த அம்மையாருக்குச் சற்றே கால நீட்டிப்பு வழங்கி இருக்கிறார்.

பிழைத்து விட்டார்.

வியந்தனர் மருத்துவர்கள். ஆப்பிளும் குங்குமமும் ஒரு உயிரைக் காப்பாற்றி விட்டது.

மகானின் கருணையையும், முதல் நாள் காஞ்சி ஸ்ரீமடத்துக்குத் தாங்கள் சென்ற நிகழ்வையும் மருத்துவர்களிடம் எடுத்துரைத்தார்கள். நடந்த அற்புதம் அறிந்து, கண்களை மூடி ஒரு கணம் காஞ்சி மகானை அவர்களும் வணங்கினார்கள்.

இரண்டே இரண்டு நாட்களுக்குப் பிறகு கதம்பத்தின் தாயாரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் மருத்துவர்கள்.

அதற்கு முன் சகல பரிசோதனைகளையும் எடுத்து, ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று குறிப்பு எழுதி அனுப்பி வைத்தனர்.

வீட்டுக்கு வந்த பின் கதம்பத்தை உறவினர்களும் நண்பர்களும் வந்து பார்த்தனர்.

எமனின் கோட்டை வரை சென்று திரும்பியவர் ஆயிற்றே! நாள் குறித்து சொந்தங்கள் அனைவரையும் வந்து பார்த்து விட்டுப் போகச் சொன்னவர் ஆயிற்றே!

எல்லாவற்றையும் தாண்டி வந்திருக்கிறார் என்றால், அது மகா பெரியவா கொடுத்த உயிர்ப்பிச்சை என்றே சொல்ல வேண்டும்.

கதம்பத்தின் தாயாரை எல்லோரும் வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்.

வீட்டில் யாரும் இல்லாத சமயம் கதம்பத்தையும் தன் கணவரையும் அழைத்து அந்தப் பெண்மணி சொன்ன ஒரு வி‌ஷயம் திகைப்பை ஏற்படுத்தக் கூடியது.

அதைக் கேட்டால், பிரமிப்புதான் மேலோங்கும்.
Tags:    

Similar News