செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2021-02-24 08:27 GMT   |   Update On 2021-02-24 08:27 GMT
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் சமநிலையில் இருந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்- அமைச்சருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் புதுவையில் கடந்த 2 வாரமாக இருந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Tags:    

Similar News