உள்ளூர் செய்திகள்
டாக்டர ராமதாஸ்

மதுக்கடைகளை மூடும் அதிகாரம் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Published On 2022-01-25 05:47 GMT   |   Update On 2022-01-25 05:47 GMT
மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க இயலாது; மதுக்கடைகள் வேண்டாம் என்று கிராமசபைகள் கோரிக்கைதான் வைக்க முடியும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கலால் துறைக்கு வழங்கி, தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மது வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை ஒரு நல்ல தொடக்கம் ஆகும். ஆனாலும், மதுக்கடைகளை மூடும் அதிகாரம் கலால்துறையிடம் இருப்பதை விட மக்களிடம் இருப்பதே சரியாகும்.

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கிராமசபைகளுக்கு உண்டா? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு ஒற்றை நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நிலையில்,  அது குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘‘மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க இயலாது; மதுக்கடைகள் வேண்டாம் என்று கிராமசபைகள் கோரிக்கைதான் வைக்க முடியும். இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கலால்துறையிடம்தான் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டதுடன், அதற்காக 3 வாரங்கள் அவகாசமும் வழங்கியுள்ளனர். 

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்; குறைக்கப்பட வேண்டும் என்று சென்னை  உயர்நீதிமன்றம் விரும்புகிறது என்பதையே நீதிபதிகளின் ஆணை காட்டுகிறது. அதேநேரத்தில் மதுக் கடைகளை மூடுவதற்கான அதிகாரம் கிராம சபைகளிடம் இருக்கக்கூடாது; கலால் துறையிடம் தான் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருதுகின்றனர். ஆனால், தமிழகத்தில் மதுவைக் கட்டுப்படுத்துவதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு பயனளிக்காது என்பதே உண்மை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனமும், மது வணிகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக உயர்நீதிமன்றத்தால் நம்பப்படும் கலால்துறையும் வேறு வேறு அல்ல... இரண்டும் ஒன்றுடன் தொடர்புடையவைதான். தமிழ்நாட்டில் மதுவணிகத்தை நடத்துவது டாஸ்மாக்  நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் கலால்துறை ஆணையரும் உறுப்பினர் ஆவார். மதுவணிகம் நடத்தும் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவரே மதுக்கடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மிகப்பெரிய நகைமுரணாகவே இருக்கும். அதுமட்டுமல்ல... கடந்த காலங்களில்  டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரே கலால்துறை ஆணையர் பொறுப்பையும், கலால்துறை ஆணையரே டாஸ்மாக் மேலாண் இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்திருக்கின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருந்து மது வணிகத்தை பெருக்குவதற்கு திட்டம் வகுக்கும் அதே அதிகாரி, கலால்துறை ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக் கொண்டு  மதுக்கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியை எப்படி நேர்மையாக மேற்கொள்ள முடியும்? அதனால், மதுக்கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியை கலால்துறையிடம் ஒப்படைப்பது சரியான முடிவு அல்ல.

இவை அனைத்தையும் கடந்து மதுக்கடைகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவது மக்கள், குறிப்பாக பெண்கள் தான். ஒரு விஷயத்தால் பாதிக்கப்படும் ஒருவருக்குத் தான், பாதிப்பை ஏற்படுத்தும் அந்த விஷயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அது தான் ஜனநாயகம். அதனால் தான் மதுக்கடைகளை மூடுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மகளிருக்கு வழங்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. மராட்டிய அரசும் அதையே நடைமுறைப்படுத்துகிறது.

மராட்டியத்தில் மதுக்கடைகளை மூடும் அதிகாரம் கிராமசபை தளத்தில் மக்களுக்குத் தான் வழங்கப் பட்டிருக்கிறது. மக்களுக்கு அதிகாரம் என்றால், மக்கள் நினைத்தால் மதுக்கடைகளை மூடிவிட முடியாது. மாறாக, ஒரு கிராமத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விரும்பினால் அதற்காக  அக்கிராமத்தின் மொத்த வாக்காளர்கள் அல்லது பெண்களில் 25 விழுக்காட்டினர் கலால் ஆணையரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவில் உள்ள கையெழுத்துகள் உண்மையானவையா? என்பதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் வாக்கெடுப்புக்கு ஆணையிடுவார்.



வட்டாட்சியர் முன்னிலையில் அனைத்து பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்புகளுடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்காளர்கள் ஆதரவளித்தால் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படும். மதுக்கடைகளை மூடுவதற்கான தீர்மானம் ஒருமுறை தோல்வியடைந்தால் அடுத்த ஓராண்டுக்கு தீர்மானம் கொண்டு வர முடியாது என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த முறையில் எந்தத் தவறும் நிகழாது. எனவே, ஒரு கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டுமா... வேண்டாமா? என்பதை  தீர்மானிக்கும் அதிகாரம் கலால்துறையிடம் இருப்பதை விட மக்களிடம் இருப்பது தான் சிறந்ததாகும்.

எனவே, ஒரு கிராமத்தில் அல்லது நகரப்பகுதியின் ஒரு வட்டத்தில் மதுக்கடை வேண்டாம் என்று  என்று அப்பகுதி மக்கள் நினைத்தால், அது குறித்து அவர்களிடமே வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்கும் வகையில் தமிழ்நாட்டின் மதுவிலக்குக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்; தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு இது ஒரு நல்லத் தொடக்கமாக இருக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News