ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2021-01-05 02:31 GMT   |   Update On 2021-01-05 02:31 GMT
பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி, அவர்கள் பாதுகாப்புடன் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது ஊர் திரும்புவதற்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது.
அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 22-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் 27-ந்தேதி இரவு திருக்கல்யாணம், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, 28-ந்தேதி தைப்பூச தேரோட்டம் ஆகியவை நடைபெறுகிறது. 

31-ந் தேதி தெப்பத்தேர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தைப்பூசத்திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவர். இதில் பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி, அவர்கள் பாதுகாப்புடன் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது ஊர் திரும்புவதற்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி பழனி முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவர் சன்னதியில் முருகப்பெருமானிடம் தைப்பூச திருவிழாவுக்கான அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து செய்திருந்தார்.
Tags:    

Similar News