செய்திகள்
பள்ளி வகுப்பறை

மகாராஷ்டிராவில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

Published On 2021-04-12 10:14 GMT   |   Update On 2021-04-12 10:14 GMT
மகாராஷ்டிராவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாத இறுதியிலும், 10ம் வகுப்பு தேர்வை ஜூன் மாதத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகி உள்ளன. நேற்று ஒரே நாளில் 63,294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 349 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்க, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு, உங்களின் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம் என கூறி உள்ளது. 



இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:-

தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுத்தேர்வுகளை நடத்த முடியாது. உங்களின் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசனை நடத்தியபிறகே, மாணவர்களின் எதிர்காலம் கருதி தேர்வை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளோம்.

இதேபோல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி, கேம்பிரிஜ் போன்ற கல்வி வாரியங்களும் தேர்வு தேதியை மறுபரிசீலனை செய்யும்படி கடிதம் எழுத உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாத இறுதியிலும், 10ம் வகுப்பு தேர்வை ஜூன் மாதத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இனி புதிய தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும். 
Tags:    

Similar News