செய்திகள்
கொள்ளையன் முருகன்

திருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்

Published On 2019-11-13 05:20 GMT   |   Update On 2019-11-13 05:20 GMT
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முருகன் நாளை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
திருச்சி:

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந்தேதி சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவள்ளி ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான முருகன், கனகவள்ளியின் மகன் சுரேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அக்டோபர் 9-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சுரேசும், 11-ந்தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் முருகனும் சரணடைந்தனர்.

ஏற்கெனவே 2014-ல் பெங்களூரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் பானஸ்வாடி போலீசார் முருகனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்த முருகன் தலைமறைவானதால் அவனுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை 15 நாள் காவலில் வைக்க பெங்களூரு நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பெங்களூரு போலீசார் பலமுறை முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் முருகன் மீண்டும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கோட்டை இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் திருச்சி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருந்து பிடிவாரண்ட் பெற்றுக்கொண்டு பெங்களூரு சென்றார்.

பின்னர் அங்கு உள்ள கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி இன்று உத்தரவு பிறப்பிப்பதாக கூறினார். நீதிமன்றம் இன்று மாலைக்குள் உத்தரவிடும் நிலையில் போலீசார் முருகனை இரவோடு இரவாக திருச்சிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். நாளை அதிகாலை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

பின்னர் லலிதா ஜூவல்லரி வழக்கில் முருகனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி ஜெயிலில் அடைக்கப்படும் அவரை மீண்டும் மனுதாக்கல் செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். முருகனிடம் போலீஸ் காவல் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News