செய்திகள்
கோப்புபடம்

தீரன் சின்னமலை கட்டிய போர் பயிற்சி பாசறையை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டுகோள்

Published On 2021-11-26 06:48 GMT   |   Update On 2021-11-26 06:48 GMT
சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலையிடம் ஆங்கில படைகள் 3 முறை தோல்வியடைந்து ஓடியுள்ளன.
திருப்பூர்:

கடந்த 1799-ல் திப்புசுல்தானின் வீழ்ச்சிக்கு பிறகு தெற்கு பகுதிகளும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் சென்றது. அதன் பின், ‘ஓடாநிலை’யில் தீரன் சின்னமலை ஆட்சி செய்து வந்துள்ளார். ஆங்கிலேயர் ஆதிக்கம் தொடங்கியதும் யாரும் ஆயுதம் வைத்திருக்க கூடாது. 

வாள், வேல், ஈட்டிகளை ஒப்படைக்க வேண்டுமென உத்தரவு போட்டுள்ளனர். அப்போது ஆங்கிலேயருக்கு எதிராக திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலைக்கு அருகே போர் பயிற்சி அளிக்கும் பாசறையும், ஆயுதம் தயாரிக்கும் பட்டறையை தீரன் சின்னமலை அமைத்துள்ளார். காலம் பல கடந்தாலும் போர் பயிற்சி பாசறை சுவர்கள் வீரவரலாற்றை சுமந்தபடி மிஞ்சியிருக்கிறது.

இதுகுறித்து, திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் கூறியதாவது:

‘பட்டாலி’ என்று போற்றப்பட்ட  சிவன்மலை கிராமத்தை அனுமந்த கவுண்டர் என்பவரிடம் 1792 ஏப்ரல் 18ல் தீரன் சின்னமலை 200 பொன் (அப்போதைய மதிப்பு) கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். சிவன்மலைக்கு அடுத்ததாக கோவில் அருகே கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு 2.50 அடி அகலமுள்ள சுவற்றை எழுப்பி போர்ப்பயிற்சி பாசறை அமைத்து படைவீரர் களுக்கு பயிற்சி அளித்துள்ளார். 

வேல், வில், ஈட்டி செய்யும் பட்டறையும் அதே பகுதியில் இருந்துள்ளது. கடந்த 2015ல் அனுமந்தராயர் கோவில் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர். கோவிலின் அருகே தீரன் சின்னமலை கட்டிய நுழைவாயிலுடன் கூடிய பாசறை சுவர் இன்னும் மிஞ்சியிருக்கிறது.

சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலையிடம் ஆங்கில படைகள் 3 முறை தோல்வியடைந்து ஓடியுள்ளன. சுதந்திர போராட்ட வீரவரலாற்றை சுமந்து நிற்கும் போர் பாசறையை மீட்டெடுத்து சுதந்திர போராட்ட சின்னமாக புதுப்பித்து தமிழக அரசு பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News