செய்திகள்
பட்டாசு

குறைந்த விலையில் வாங்கலாம்- சென்னையில் 40 இடங்களில் நாளை முதல் பட்டாசு விற்பனை

Published On 2021-10-24 05:50 GMT   |   Update On 2021-10-24 05:50 GMT
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 முதல் 15 பட்டாசு கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ந்தேதி வருகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாகவே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

தீபாவளிக்கு புத்தாடை வாங்குவது போல் பட்டாசுகளும் பலர் விரும்பி வாங்குவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் இப்போதே பட்டாசு கடைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள் ஆகியவற்றிலும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் நாளை முதல் துவக்கப்பட உள்ளன.

சென்னையில் டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், பூங்கா நகர் கூட்டுறவு பண்டக சாலை, வடசென்னை கூட்டுறவு பண்டக சாலை, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் சார்பில் தேனாம்பேட்டை, அண்ணா நகர், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், கீழ்ப்பாக்கம், அசோக்நகர் குரோம்பேட்டை, தாம்பரம் உள்பட 40 இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட உள்ளன.



இதில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில் மட்டும் தேனாம்பேட்டை அண்ணாசாலை, ராஜா அண்ணாமலைபுரம், ராயப்பேட்டை, பெசன்ட்நகர், அடையாறு காந்திநகர், திருவல்லிக்கேணி பெரிய தெரு, மயிலாப்பூர் ஆர்.கே.மடம் பிராடிஸ் ரோடு, சைதாப்பேட்டை பஜார் ரோடு, சாலிகிராமம் ஆற்காடுசாலை, வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் தெரு, நுங்கம்பாக்கம், பெரம்பூர் பெரியார் நகர் கார்த்திகேயன் சாலை ஆகிய இடங்களில் பட்டாசு விற்பனை செய்யும் மையங்கள் திறக்கப்படுகின்றன. இதேபோல் பூங்கா நகர் கூட்டுறவு பண்டக சாலை, வடசென்னை கூட்டுறவு பண்டகசாலை ஆகியவற்றின் சார்பிலும் பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 முதல் 15 பட்டாசு கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரி தெரிவித்தார்.

அனைத்து கூட்டுறவு கடைகளிலும் ஸ்டாண்டர்டு ரக பட்டாசுகளை குறைந்த விலையில் விற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு கூட்டுறவு கடைகளிலும் பட்டாசு விற்கும்போது எம்.ஆர்.பி. எனப்படும் அதிகபட்ச விலை எவ்வளவு? தள்ளுபடி எவ்வளவு போன்ற விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக பில் கொடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News