ஆன்மிகம்
திருநள்ளாறு நளன் குளம்

27-ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறு நளன் குளத்தில் நீராட தடை

Published On 2020-12-16 09:00 GMT   |   Update On 2020-12-16 09:00 GMT
சனிபகவானின் நளன் குளத்தில், கொரோனா காலத்தை முன்னிட்டு பக்தர்கள் நீராட இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை சனிப்பெயர்ச்சி விழா முடியும் வரை நீடிக்கும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காரைக்கால் :

புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் சனிபகவான் கோவில் உள்ளது. இங்கு வருகிற 27-ந் தேதி காலை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.

சனிபெயர்ச்சி விழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் 3 கட்டமாக ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில் பக்தர்கள் முககவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

விழாவில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அனைவரும், ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். (ஆன்லைன் முகவரி - www.thirunallarutemple.org).

இந்த நடைமுறையானது, வருகிற 19-ந் தேதி முதல் 24-1-2021 வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், இலவச தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் (ரூ.1000, ரூ.600 மற்றும் ரூ.300) என அனைத்திற்கும், ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

விழாவின் போது பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது.

கோவிலுக்குள் நுழையும் பக்தர்கள் அனைவரும் கோவில் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள், தரிசனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சனிபகவானின் நளன் குளத்தில், கொரோனா காலத்தை முன்னிட்டு பக்தர்கள் நீராட இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை சனிப்பெயர்ச்சி விழா முடியும் வரை நீடிக்கும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நளன் குளத்தில் தற்போது சிறிதளவே தண்ணீர் இருப்பதால், கோவில் நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி சில பக்தர்கள் குளித்து, தங்கள் ஆடைகளை குளத்தில் வீசி செல்வதால் பக்தர்கள் நீராடலை தவிர்க்கும் வகையில், தண்ணீரை முழுமையாக இறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இலவச தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனத்திற்காக கோவிலின் 4 வீதிகளிலும் பக்தர்கள் நடந்து செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, கம்பு மற்றும் தகறத்தால் ஆன, நீண்ட நிழல் பந்தல் அமைக்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News