செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி

சென்னைக்கு வந்த 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

Published On 2021-04-21 06:29 GMT   |   Update On 2021-04-21 09:55 GMT
6 லட்சம் தடுப்பூசியில் சென்னைக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துவதால் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இதையடுத்து புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து 6 லட்சம் டோஸ் (60 ஆயிரம் பாட்டில்கள்) கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



புனேவில் இருந்து விமானம் மூலம் 6 லட்சம் கோவிஷீல்டு மருந்து பார்சல்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.

இவை வேன் மூலம் கொண்டு வந்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் பத்திரமாக வைக்கப்பட்டது. அதன் பிறகு மற்ற மாவட்டங்களுக்கு இவற்றை பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

6 லட்சம் தடுப்பூசியில் சென்னைக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து சென்னைக்கு மட்டும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 25 ஆயிரத்து 550, திருவள்ளூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 70, கடலூருக்கு 13 ஆயிரத்து 720, விழுப்புரத்துக்கு 6,600, வேலூருக்கு 18 ஆயிரத்து 50, சேலத்துக்கு 16 ஆயிரத்து 520, நாமக்கல்லுக்கு 11 ஆயிரத்து 660 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் கோவைக்கு 46 ஆயிரத்து 270, திருச்சிக்கு 24 ஆயிரத்து 300, தஞ்சைக்கு 13 ஆயிரத்து 810, மதுரைக்கு 22 ஆயிரத்து 190, நெல்லைக்கு 6,600, கன்னியாகுமரிக்கு 12 ஆயிரத்து 40, தூத்துக்குடிக்கு 31 ஆயிரத்து 700 வீதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதே போல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தபட்சம் 6 ஆயிரம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் 9 லட்சத்து 23 ஆயிரத்து 920 தடுப்பூசிகள் உள்ளன.
Tags:    

Similar News