ஆன்மிகம்
தங்கரத தேரை வடம் பிடித்து இழுத்த காட்சி, சின்னக்குமாரருக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது எடுத்த படம்.

பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு 10 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது

Published On 2021-01-27 05:48 GMT   |   Update On 2021-01-27 05:48 GMT
பழனி முருகன் கோவிலில் 10 மாதங்களுக்கு பிறகு, தைப்பூச திருவிழாவையொட்டி தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி முருகன் கோவிலில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது தைப்பூச திருவிழா நடைபெற்று வருவதால், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் பழனி முருகன் கோவிலில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தைப்பூச திருவிழாவின் 5-ம் நாளில் கோவில் நிர்வாகம் சார்பில் தங்க ரத புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவில் நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் பழனி மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

முன்னதாக சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார். பின்பு அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் நடந்த தங்கரத புறப்பாட்டில் கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் வடம் பிடித்து தங்க ரதத்தை இழுத்தனர்.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி முதல் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவையொட்டி 10 மாதங்களுக்கு (308 நாட்கள்) பிறகு நேற்று தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவுக்கு பின்னர் தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News