ஆன்மிகம்
பச்சைப்பட்டு உடுத்தி வெள்ளி கவசத்தில், வள்ளி தெய்வயானையுடன் உற்சவர் முருகப்பெருமான் அருள்பாலித்த காட்சி.

திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

Published On 2020-11-16 07:55 GMT   |   Update On 2020-11-16 07:55 GMT
திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கொரோனா காலத்தையொட்டி, சொற்ப அளவிலேயே கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரின் மலைப்பகுதியில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கந்த சஷ்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமான் தனது சினம் தணிய திருத்தணி மலை மேல் வந்து அமர்ந்ததால் இதற்கு தணிகை மலை என்ற பெயர் ஏற்பட்டதாக ஐதீகம் உண்டு.

இதையொட்டி, திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறும் அதே நாளில் அவர் சாந்தி அடைந்த திருத்தணியில் உள்ள கோவிலிலும், கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெறுவது வழக்கம்.இதன் காரணமாக நேற்று காலை விழாவை முன்னிட்டு, மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக சகஸ்ரநாம சிறப்பு பூஜை அர்ச்சனைகள் நடத்தப்பட்டன. மூலவர் முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும் உற்சவர் வள்ளி தெய்வயானை உடனுறை சண்முகநாதருக்கு பச்சை பட்டு உடுத்தி வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீப ஆராதனைகளுடன், மாலை முருகனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா இம்மாதம் 21-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் முருகர், வள்ளி, தெய்வயானை ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கந்தசஷ்டி தொடக்க விழாவில் கோவிலில் குறைந்த அளவு பக்தர்களே நேற்று தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர், செயல் அலுவலருமான லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News