செய்திகள்
பல்லி துர்க்காபிரசாத் ராவ்

திருப்பதி தொகுதி எம்.பி. கொரோனாவுக்கு பலி

Published On 2020-09-17 01:47 GMT   |   Update On 2020-09-17 01:55 GMT
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருப்பதி தொகுதி எம்.பி. துர்காபிரசாத் ராவ் கொரோனாவுக்கு பலியானார்.
ஸ்ரீகாளஹஸ்தி:

ஆந்திர மாநிலம் திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பல்லி துர்காபிரசாத் ராவ் (வயது 65). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருடைய மனைவி சரளா (60).

கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல்லி துர்காபிரசாத் ராவ்வுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பல்லி துர்காபிரசாத் ராவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, ஆந்திர மாநில துணை முதல் - மந்திரி கே.நாராயண சுவாமி, தொழில்துறை மந்திரி மேகப்பாடி கவுதம்ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்த பல்லி துர்காபிரசாத் ராவ் எம்.பி. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பல்லி துர்காபிரசாத் ராவ் எம்.பி., சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். பல்லி துர்காபிரசாத் ராவ்வை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறைந்த பல்லி துர்காபிரசாத் ராவ்வின் சொந்த ஊர் நெல்லூர் மாவட்டம் கூடூர் ஆகும். அவர், தனது 28-வது வயதில் தெலுங்கும் தேசம் கட்சி சார்பில் கூடூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985, 1994, 1999, 2009 ஆகிய 4 முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது எம்.பி.யாகவும் இருந்தார்.

பல்லி துர்காபிரசாத் ராவ் கடந்த ஆண்டு தெலுங்கும் தேசம் கட்சியில் இருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News