செய்திகள்
கோவில் பிரசாதம்

கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு சுகாதார சான்று கட்டாயம்

Published On 2019-11-04 05:21 GMT   |   Update On 2019-11-04 08:21 GMT
தமிழகத்தில் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு, விரைவில் சுகாதார சான்று கட்டாயம் ஆக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 606 கோவில்கள் உள்ளன.

இதில் 754 கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது பிரதான கோவில்களில் ஸ்டால்கள் மூலம் பக்தர்களுக்கு லட்டு, முறுக்கு, வடை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த பிரசாதங்களை கூடுதல் தரத்துடன் வழங்க மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கோவில் பிரசாதங்களுக்கு சுகாதார சான்று பெறுமாறு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 46 பெரிய கோவில்களில் இந்த முறையை அமல்படுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.

 


ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான 2-வது இடத்திற்கான விருதை மத்திய அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்த அற நிலையத்துறை அதிகாரிகள் விரைவில் இந்த கோவில் பிரசாதங்களுக்கு சான்று வழங்கப்படும் என்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டிலேயே உணவு பாதுகாப்பு துறை, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு சுகாதார சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் கோவில்களில் அதற்குரிய தயாரிப்பு பயிற்சிகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த முறை அமல்படுத்தப்படவில்லை. தற்போது கோவில்களில் பிரசாதம் தயாரிக்கப்படும் இடங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News