செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க நிட்மா வலியுறுத்தல்

Published On 2021-10-30 06:40 GMT   |   Update On 2021-10-30 06:40 GMT
கோவை உக்கடத்தில் தொடங்கி விமானநிலையம் வழியாக கணியூர் வரை மட்டுமின்றி பின்னலாடை தொழில் நகரான திருப்பூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் முழுமைத்திட்ட எல்லை விரிவாக்கம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்தநிலையில் திருப்பூரின் வளர்ச்சிக்கு தேவையான திட்டப்பணிகள் குறித்து முதன்மை செயலர், கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு நிட்மா (பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம்) தலைவர் ரத்தினசாமி கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில் திருப்பூர் மாநகராட்சியை 100 வார்டு கொண்ட பெருநகராக பிரிக்க வேண்டும். 10 வார்டுக்கு ஒரு மண்டலம் உருவாக்கி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைகளை மேம்படுத்தவேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நதிகள், குளங்களை மேம்படுத்த தனித்தனி குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். கோவை உக்கடத்தில் தொடங்கி விமானநிலையம் வழியாக கணியூர் வரை மட்டுமின்றி பின்னலாடை தொழில் நகரான திருப்பூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் பயன் பெறுவர்.

பின்னலாடை துறை லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டிப்பிடிக்க இத்தகைய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அவசியம்.நொய்யல் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தொழிற்சாலை, சாக்கடை கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடவேண்டும். 

நதிக்கரையில் பூங்காக்கள் அமைக்கலாம். நஞ்சராயன் குளத்தை அழகுபடுத்தி பறவைகள் சரணாலயமாக மாற்றவேண்டும். திருப்பூர் மாவட்டம் முழுவதும் எளிதாக சரக்குகளை கொண்டு செல்ல ஏதுவாக, வஞ்சிபாளையத்தில் ரெயில்வே குட்ஷெட் அமைக்கலாம். திருப்பூர் ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு இல்லாதது, பயணிகள் காத்திருக்கும் ஓய்வு அறைகள் பராமரிப்பு இல்லாதது குறையாக உள்ளது. 

தொழிலாளர் நலன் கருதி இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். வஞ்சிபாளையம் முதல் காசிபாளையம் வரை நொய்யல் ஆற்றின் மீது பறக்கும் பாலம் அமைக்க வேண்டும். திருமுருகன்பூண்டியில் இருந்து நல்லாற்றின் கரையில் சாலை அமைத்து பி.என்., ரோட்டையும், அவிநாசி ரோட்டையும் இணைக்க வேண்டும். 

எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் இருந்து வளம் ரோட்டுக்கு செல்ல போடப்பட்ட சுரங்கப்பாதை பணி பாதியில் நிற்கிறது. சுரங்கப்பாதை அமைந்தால் குமரன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் நீங்கும். ஈஸ்வரன் கோவில் அருகே நொய்யலாற்றில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  
Tags:    

Similar News