செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

திருமங்கலத்தில் இளைஞர்களுக்கான விளையாட்டு திட்டம்- அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்

Published On 2020-01-14 09:47 GMT   |   Update On 2020-01-14 09:47 GMT
திருமங்கலம் தொகுதியில் இளைஞர்களுக்கான விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மதுரை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மனவளத்தை மேம்படுத்தும் கூட்டு மனப்பான்மையை உருவாக்கும் இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவித்து வெளிக்கொணரும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு ரூ.76 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 300 க்கான நிதி ஒதுக்கீடு அரசாணையாக வெளியிட்டனர். இதனை தொடர்ந்து 13052 கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்பட்டது

இந்த விளையாட்டு போட்டியில் கபடி வாலிபால் கிரிக்கெட் மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு அந்தந்த கிராமங்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்காக அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 4 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இந்த விளையாட்டுக்கான விளையாட தேவையான கம்பங்கள் கிரிக்கெட் மட்டைகள் பந்துகள் கையுறைகள் முதலான பொருட்கள் அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. திறந்தவெளி உடற்பயிற்சி மையம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது

கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது பூப்பந்து ஆகிய விளையாட்டுகளில் ஊராட்சி ஒன்றிய அளவில் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அம்மா பட்டியில் இளைஞர் விளையாட்டு திட்டத்தினை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் இன்று தொடங்கி வைத்தார். அப்போது கிரிக்கெட், கைப்பந்து ஆகிய விளையாட்டுகளை அவர் விளையாடினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், துணை கலெக்டர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் திருமங்கலம் யூனியன் சேர்மன் துணைச் சேர்மன் வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட துணைச் செயலாளர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News