செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஜனாதிபதிக்கு ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை வெற்றி

Published On 2021-03-31 00:07 GMT   |   Update On 2021-03-31 00:07 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு (வயது 75) கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு (வயது 75) கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதியை மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்ற ராணுவ ஆஸ்பத்திரி டாக்டர்கள் 27-ந்தேதி முடிவு எடுத்தனர். அதன்பேரில் அன்று பிற்பகலில் அவர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இதயத்தில் ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர்.

இந்த அறுவை சிகிச்சை 30-ந்தேதி (நேற்று) காலையில் செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன.

அதன்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று காலையில் திட்டமிட்டபடி இதயத்தில் ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

இதை ஜனாதிபதி மாளிகை ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதில், “அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது. ஜனாதிபதி உடல்நிலை சீராக உள்ளது. அவரைத் தொடர்ந்து மூத்த டாக்டர்கள் குழுவினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்” என கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதற்காக டாக்டர்கள் குழுவினரை நான் பாராட்டுகிறேன். ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனரிடம் பேசினேன். ஜனாதிபதி நலமுடன் இருக்கவும், விரைவாக குணம் அடையவும் பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News