ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலில் நேற்று சாமி தரிசனத்துக்கு குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

3 நாள் தடை எதிரொலி: ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2021-10-01 04:49 GMT   |   Update On 2021-10-01 04:49 GMT
இன்று முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை காரணமாக ராமேசுவரம் கோவிலில் கடந்த இரண்டு நாட்களாகவே வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை காரணமாக ராமேசுவரம் கோவிலில் கடந்த இரண்டு நாட்களாகவே வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.

குறிப்பாக தற்போது மகாளய பட்சம் நடந்து வருவதால் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்ய அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பூஜை செய்யவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அது போல் நேற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில் பூஜை செய்ய மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பிரகாரத்தில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே வருகின்ற 6-ந் தேதி அன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை வருகின்றது. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட மகாளய அமாவாசை மிகவும் முக்கியமாக இருப்பதால் அன்று வழக்கம்போல் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி, தர்ப்பண பூஜை செய்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு தடையும் விதிக்காமல் அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்களும் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News