செய்திகள்
நகை திருட்டு

வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு - 2 வாலிபர்கள் கைது

Published On 2019-11-22 08:48 GMT   |   Update On 2019-11-22 08:48 GMT
பாபநாசம் அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பாபநாசம்:

பாபநாசம் அருகே பண்டாரவாடை மெயின் ரோட்டில் வசித்து வருபவர் இப்ராஹீம் ஷா மனைவி மெகராஜ் நிஷா (வயது 32). இவர் கடந்த ஜூலை 12-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார்.

பின்னர் இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து மெகராஜ் நிஷா பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துணை சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஏட்டுகள் சம்பத், மதியழகன், தனிப்பிரிவு ஏட்டு பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அய்யம்பேட்டை சாவடி பஜார் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் பசுபதிகோவிலை சேர்ந்த லோகநாதன் (28), மணக்கூண்டு புதுக்குடியைச் சேர்ந்த ராஜகணபதி (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் மெகராஜ் வீட்டில் 17 பவுன் நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து திருடிய நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து பாபநாசம் மாஜிஸ்திரேட் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News