செய்திகள்
கோப்பு படம்

ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் தாய் மரணம்- உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

Published On 2021-01-11 08:12 GMT   |   Update On 2021-01-11 08:12 GMT
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர்களின் அலட்சியப் போக்கு காரணமாக அவர் இறந்ததாக கூறிய உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர்:

ஒசூர் அரசு மருத்துவமனை கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த மாதம் 30- ந் தேதி அன்று ஒசபுரத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 26) என்பவர் பிரசவத்துக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள், குழந்தையின் தலையை துண்டித்து வெளியே எடுத்ததாக கூறப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரசவத்தில் தாய் இறந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஓசூர் அடுத்த தொடுதேப் பள்ளியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி பவித்ரா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 3-ந் தேதி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பவித்ராவுக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் டாக்டர்கள் பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை பவித்ராவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனர். பிறகு இரவு 7 மணியில் பவித்ராவின் உடல்நிலை மோசமானது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதை கேள்விப்பட்ட பவித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்களின் அலட்சியப் போக்கு காரணமாக பவித்ரா இறந்து விட்டதாக குற்றம்சாட்டி, திடீரென ஆஸ்பத்திரியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர்களிடம் மருத்துவமனை முதன்மை அலுவலர் பூபதி, டி.எஸ்.பி. முரளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பவித்ராவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்,

Tags:    

Similar News